முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் என்பன திருட்டு கட்சிகள் என்பது ஜனாதிபதிக்கு தெரியும் ; ஐக்கிய காங்கிரஸ் தெரிவிப்பு

பாறுக் ஷிஹான்
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் என்பன திருட்டு கட்சிகள் என்பது ஜனாதிபதி அநுரவுக்கு நன்கு தெரியும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் கடந்துள்ளமை தொடர்பில் அக்கட்சி ஊடகங்களிற்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.இதன்போது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முஜ்னப் முபாறக் இச் செய்தி அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் ஆகியும் எம்பிமார் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஏன் இன்னமும் ஜனாதிபதியை சந்தித்து சமூக பிரச்சினைகள் பற்றி பேசவில்லை என சிலர் கேட்கின்றனர்.முதலில் இந்த முஸ்லிம் கட்சிகள் கடந்த காலங்களில் அமைச்சரவையில் இருந்தும் ஜனாதிபதிகளுடன் பேசி சமூகத்துக்கான ஒரு பிரச்சினையையாவது தீர்த்து தந்தார்களா?
ஜனாதிபதிகளுடன் தமது சொந்த பதவிகள் பற்றி பேசியதே 25 வருட வரலாறு.முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பன திருட்டு கட்சிகள் என்பது ஜனாதிபதி அநுரவுக்கு நன்கு தெரியும். திருடர்களையும் ஊழல்வாதிகளையும், ஒழிப்பேன் என கங்கனம் கட்டிக்கொண்டு அதற்காக தொடர்ந்து பாடுபடும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் எப்படி இந்த சமூகத்துரோக கட்சிகளுடன் பேசுவது?
பகிரங்க தளங்களில் நடிகையை கண்டால் கட்டிப்பிடித்து கொஞ்சுவது, ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது, அரசியல் நலனுக்காக பொய் வாக்குறுதிகள் கொடுத்து பாவித்து விட்டு ஏமாற்றுவது, வாயை திறந்தால் பொய் தவிர எதையும் பேச முடியாமை, கஞ்சா பாவித்தல், லூத் நடவடிக்கை என அத்தனை கேவலங்களையும் செய்யும் அதிகார முஸ்லிம் கட்சிகளை எவ்வாறு முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஜனாதிபதி பார்க்க முடியும்.
அத்துடன் இந்தக்கட்சிகள் எதிர்க்கட்சிகளுடன் சங்கமித்து தனித்துவத்தை இழந்துள்ளனர். சஜித் பிரேமதாச கட்சியின் எம்பியாகவே ஹக்கீமும் ரிசாதும் உள்ளனர்.இதனால்தான் நாம் பலமுறை சொல்லியுள்ளோம், மக்கள் வாக்குகள் உள்ள கட்சிகள் தனியாக போட்டியிட்டு வெல்வதே தனித்துவத்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்தும். ஆனால் அமைச்சு, சேர்மன் பதவிக்கு ஆசைப்பட்டு இவர்கள் பேரின கட்சிகளுடன் இணைந்துள்ள நிலையில் பதவி வெறி பிடித்த இவர்களுடன் நம் ஜனாதிபதி பேசுவது ஜனாதிக்கு அகௌரவமாகும்.
முஸ்லிம் சமூகம் இந்த குப்பை கட்சிகளை குப்பையில் தூக்கிப்போட்டால் மட்டுமே சமூகத்துக்கு கௌரவம் கிடைக்கும், ஜனாதிபதியும் முஸ்லிம் சமூகத்துடன் பேச முடியும்.
ஆனாலும் கடந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்கமாக ஆதரவு கொடுத்த முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்களுடன் ஜனாதிபதி பேச வேண்டும் என்பதும்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வேண்டு கோளாகும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—
Thanks & Best Regards,
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



