
“தன்மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர்களுக்கு தண்டனை வழங்கி அந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிக்கிறார் என்றால் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் செயற்பாடுகளில் குறைபாடு இருக்கிறது என்பது தெளிவாகிறது” 
என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பதிலாக கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு பொலிஸ் மா அதிபர் பதவியை பெற்றுக்கொடுத்ததும், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு இடையில் பனிபோர் ஏற்படுவது தொடர்ச்சியாக அவதானிக்க கூடிய இலகுவான காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (03) செய்தியாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழுவினால் சிரேஷ் ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸின் உள்ளகத் தகவல்களை வெளிநபர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமான எடுத்துக்காட்டாகும். இதனை தற்போதே முடிவுக்கு கொண்டுவரவில்லை என்றால் நாட்டில் இடம்பெறும் ஊழல்கள் வெளிவரும் செயற்பாடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
பொலிஸாருக்கான பெனியன் கொள்வனவு செய்யும்போது விதிமுறைகளில் குறிப்பிடப் பட்டுள்ள நிபந்தனைகளை பூரணப்படுத்தாமல் அதிக விலை குறிப்பிட்டிருந்த விநியோகஸ்தர் ஒருவருக்கு பெனியன் கொள்வனவு செய்யும் விநியோகத்துக்கான விலைமனு கோரலை வழங்கியதாக பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. விலை குறைவான ஒருசில நிபந்தனைகளைப் பூரணப்படுத்த தவறிய ஏனைய விநியோகஸ்தர்களுக்கு, விடுபட்ட நிபந்தனையை திருத்தி விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவதற்கு பதிலாக அதிக விலை, குறைப்பாடுகள் அதிகம், விநியோகஸ்தர் ஒருவருக்கு குறைப்பாடுகளை நிவரத்தி செய்து கொண்டு 1,75,000 பெனியன்களை விநியோகிப்பதற்கான பொறுப்பை ஒப்படைப்பதாகவே மேலும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக விநியோகஸ்தர் குறைப்பாடுகளை முறையாக நிவர்த்தி செய்யாமலேயே 1,75,000 பெனியன்களை பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளார். பெனியனை பொறுப்பேற்கும் கடமையை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்தரசிறி நிராகரித்துள்ளார். அதன்போது, பொலிஸ் மா அதிபர் பிரதி பொலிஸ் மா அதிபரை திட்டி பெனியனை பொறுப்பேற்குமாறு கட்டளையிட்டாராம்.
இந்த விடயத்தையே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தொலைபேசியினூடாக தகவல்களுடன், ஊடகர் ஒருவருக்கு தெளிவாக விளக்கமளித்துள்ளார். இந்த தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சேறு பூசுவதற்காக பத்திநாயக்க இந்த தகவலை வழங்குமாறு கூறவில்லை. அவ்வாறு இல்லாவிட்டால் ஊழலுக்கு எதிராக ஊடகங்களினூடாக பிரபல்யத்தை பெற்றுக்கொடுக்குமாறும் அவர் கூறவில்லை. ஆனால் இதுதொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு மாத்திரமே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகருக்கு கோரியிருந்தார். இதிலிருக்கும் தவறு என்ன. இதில் எந்த தவறும் இல்லை.
நாட்டில் ஏதாவதொரு இடத்தில் இலஞ்ச ஊழல் இடம்பெறுகிறது என்றால் அதுதொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதே ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். அதனையே பத்திநாயக்கவும் செய்திருக்கிறார். ஊழல் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் கடமையை நிறைவேற்றுவது தண்டனையளிக்க கூடிய தவறாக மாறுமாக இருந்தார் இந்த நாட்டில் ஊழலை யாராலும் தடுக்க முடியாது.
ஊழலொன்று இடம்பெறும்போது அதனை தெளிவுபடுத்தி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவே முயற்சித்துள்ளார். அவ்வாறானவர்களை பாதுகாப்பதற்கு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் ஒழுங்குவிதிகள் இருக்கின்றன. பத்திநாயக்கவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது. பத்திநாயக்க ஊழல் தொடர்பான தகவலை ஊடகருக்கு பெற்றுக்கொடுத்த தொலைபேசி குரல் பதிவை பிரபல்யப்படுத்தி ஊழலுக்கு எதிராக போராடும் பத்திநாயக்கவை காட்டிக்கொடுத்து அவரை ஆபத்து நிலைமைக்கு தள்ளியவர்களுக்கு எதிராகவே சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குற்றமொன்றின் பிரதிவாதிகள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான அதிகார சபையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும பத்திநாயக்கவை பாதுகாப்பதற்காக முன்னிருந்து செயற்படுவார்கள் என்று எதிரபார்க்கிறோம்.
பொலிஸ் ஆவணங்களிலுள்ள தகவல்களை வெளிப்படுத்தும் தண்டனைக்குரிய குற்ற மென்றால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கே முதலில் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த கொள்வனவு தொடர்பான சகல தகவல்களையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பெற்றுக்கொடுத்து இதுதொடர்பில் நீதியான விசாரணையை மேற்கொண்டும் தனது நற்பெயரை பார்த்துக்கொள்வதே அவசியம். தன்மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர்களுக்கு தண்டனை வழங்கி அந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிக்கிறார்கள் என்றால் பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளில் குறைப்பாடு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பதிலாக கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு பொலிஸ் மா அதிபர் பதவியை பெற்றுக்கொடுத்ததும், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு இடையில் பனிப்போர் ஏற்படுவதும் தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடிய இலகுவான காரணமாகும். இது வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளது என்றார்
  
 
 


