எமக்கு எதிராக கடுமையான வெறுப்புப் பேச்சு பேசுகிறார்கள், சேறு பூசும் பிரச்சாரங்களை நடத்துகிறார்கள் – எமது வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டும் ; LGBTQ சானு நிமேஷா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

இலங்கை LGBTQ உரிமைகள் ஆர்வலர் சானு நிமேஷா, LGBTQ சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சு தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய சானு நிமேஷா, LGBTQ சமூகத்திற்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக கடுமையான வெறுப்புப் பேச்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால், இப்போது LGBTQ சமூகத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சேறு பூசும் பிரச்சாரங்களை நடத்துகிறார்கள்.
நாங்கள் எல்லோரும் சாதாரண மனிதர்கள், எங்களுக்கு LGBTQ என்று பேட்ஜ் அணிய வேண்டிய அவசியமில்லை,” என்று சானு நிமேஷா கூறினார்.மேலும், தாங்கள் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை; தங்களின் வழமையான வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“LGBTQ சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கு நாங்கள் எதிரானவர்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினை இருந்தால், அதை வேறு வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றும் சானு நிமேஷா குறிப்பிட்டார்.
  
 
 


