முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு (அவர்களின் பணத்தில்) 2 துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில் நேற்று (27) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற்கொண்டு புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“2022 போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை நாங்கள் பார்த்தோம். 72 எம்.பி.க்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையும் தாக்கப்பட்டது. சமீபத்தில் பங்களாதேஷில் இதேபோன்ற சம்பவம் ஒரு தீவிரமான முறையில் பதிவாகியுள்ளது. இதேபோன்ற ஒரு சம்பவம் இலங்கையில் மீண்டும் நிகழாது என்று நாங்கள் உறுதியளிக்க முடியாது, ”என்று அவர் கூறினார்.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் செலவில் இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவர்களது இல்லங்களில் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே துப்பாக்கிகளை வைத்திருப்பதை வெளிப்படுத்திய அமைச்சர் குணவர்தன, எவ்வாறாயினும் தன்னிடம் துப்பாக்கி இல்லை என்றும் கூறினார்