கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு 95 வீதமான வட கிழக்கு மக்கள் வாக்களித்ததை போன்று அதே ஆதரவை இம்முறையும் இறைவன் அருளால் அவர் பெறுவார் என்பதில் பூரண நம்பிக்கையுடன் இருக்கிறோம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் ,உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வெளிச்சத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பொத்துவிலில், செவ்வாய்க்கிழமை(27) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட இக் கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வரும்போது சிறுபான்மை மக்கள் அவர்களின் வாக்குகளின் பெறுமானத்திற்கு சரியாக தேர்வை மேற்கொண்டு நாட்டுக்கான தலைமையைத் தெரிவு செய்வது மாத்திரமல்ல, தேசிய தலைவர்கள் உங்களை நாடி வருகின்ற மிக முக்கியமான தேர்தல் தான் ஜனாதிபதித் தேர்தல்.
பாராளுமன்ற தேர்தல் வந்தால் கட்சிக்கு வாக்களியுங்கள். உங்கள் சமூகத்திற்குத் தேவையான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், தனக்கென வாக்கு கேட்கும் ஒரு நிலவரம் தேசிய தலைமைகளுக்கு ஏற்படுவது ஜனாதிபதி தேர்தலில் தான்.
ஜனாதிபதித் தேர்தலை மிக சாணக்கியமாக சிறுபான்மையினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவு செய்த வேட்பாளர் சஜித் பிரேமதாச.
உங்கள் முன்னிலையில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கச் சொல்லும் இரண்டாவது சந்தர்ப்பம் இது.
இதற்கு முன்பு சஜிதை ஆதரிக்கச் சொன்னோம். அந்தக் கட்டத்தில் உங்களுக்குத் தெரியும். கோட்டாபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை உணர்ச்சிவசப்படுத்தி நாட்டின் பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலாகி இருக்கிறது. அதை உறுதிப்படுத்துவதாக இருந்தால் முஸ்லிம் தீவிரவாதம் இந்த நாட்டில் ஆட்கொண்டு விட்டதென்கின்ற பெரிய அபாண்டத்தைச் சுமத்தினார்.
உண்மையில் அதைச் செய்தவர்கள் மற்றும் செய்வித்தவர்கள் அவர்கள்தான் என்ற விவகாரத்தையிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் ஆறு தடைவைகள் விவாதங்ளை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு தடைவையும் சஜித் பிரேமதாச அங்கு நீண்ட உரைகளை ஆற்றினார்.
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் இருந்த, முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த கும்பலை தங்களுடைய கூலிப்படையாக ஜனாதிபதி தேர்தலை வெல்லுவதற்காக அன்றைய ஜனாதிபதி பயன்படுத்தினார் என்பதை பகிரங்கமாகப் பேசியவர்தான் சஜித் பிரேமதாச.
சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் அந்த சதியின் பின்னணி சம்பந்தமாக சரியான ஒரு விசாரணை செய்யப்பட்டு, அதில் தண்டிக்கபட வேண்டியவர்கள் யார்? அரச இயந்திரத்தின் கூலிப்படைகள் எவ்வாறு பங்கேற்றின என்பவற்றையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவரவுள்ளோம்.
அந்தக்கூலிப்படைகளில் முக்கியமானவர்கள் அரசாங்கத்தில் பதவிகளை வகித்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் மேடையில் அமர்ந்திருக்கின்றார்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்திற்கு முன் சத்தியக் கடதாசி மூலம் அந்த இயக்கத்தில் இருந்த ஒருவரும் கூட பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். இவ்வாறு அரங்கேறும் விடயம் இன்று நேற்றைய விடயமல்ல.
இந்த கூலிப்படைகள் பொத்துவிலிலும் உயிர்களைப் பலி கொண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் . அன்று இந்த மண் பதற்றத்தில் இருந்தது. முஸ்லிம்கள் அச்சத்தோடு வாழ்ந்த காலம் அது. அதில் தலையிட்டதற்காக எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு பிரிவினரையும் அப்போது பறித்தார்கள்.
அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சவில்லை .உண்மையைச் சொன்னோம்.
அதன் போது ஒரு வித்தியாசமான அரச பயங்கரவாதம் அரங்கேறுகின்றது. அதை வைத்துக்கொண்டு கூலிப்படைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் பேசினோம்.
‘ஒரு ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்தம் எங்களது தெரிவு எவராக இருந்தாலும் ,வட கிழக்கில் வாழ்கின்ற அனைத்து சிறுபான்மைகளும் 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கட்டும், 2010ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவாக இருக்கட்டும், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவாக இருக்கட்டும் 2019 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவாக இருக்கட்டும் ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் 90,95 சதவீதம் வாக்களித்தார்கள்.
ஆனால் சிறுபான்மை இனத்தினர் தமது தெரிவில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
ஆனால் இந்த தேர்தலில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கு ஒரு சாரார் முயற்சிக்கின்றார்கள்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, இனவாதத்தை தூண்டி வாக்குச் சேகரிப்பதை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு வடகிழக்கு மக்கள் 95வீதமான வாக்குகளை அளித்தார்கள்.அதே ஆதரவை இறைவன் அருளால் அவர் பெறுவார் என்பதில் பூரண நம்பிக்கையோடு இருக்கின்றோம் என்றார்.