பெருமளவான சுமார் மூன்று கோடி பெறுமதியான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கைது

பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) இரவு 10.20 மணியளவில் சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட சீன விமான சேவையின் CA-426 இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இதன்போது சுங்க அதிகாரிகளுக்கு இந்த இரண்டு நபர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த மாணிக்கக்கற்கள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக்கற்களின் பெறுமதி சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா என குறிப்பிடப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் ஆகிய பிரதான வகைகளைச் சேர்ந்த 756 கரட் எடையுள்ள 390 மாணிக்கக்கற்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


