அவுஸ்திரேலிய விக்டோரியா மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுடன் ”ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது விசாரணை
அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டமை தொடர்பாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீர, அவுஸ்திரேலிய கிரிக்கெட்டினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
துலீப் சமரவீர, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
இதன்போது பெண் வீராங்கனை ஒருவருக்கு எதிராகப் பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்து கொண்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் அந்த பதவியிலிருந்து விலகிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை எனவும் விக்டோரியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துலீப் சமரவீர, இலங்கை அணியின் சார்பில் 5 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பதுடன், நட்சத்திர கிரிக்கெட் வீரர் திலான் சமரவீரவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.