அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்காக, சவுதி அபிவிருத்தி நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மேலதிகமாக 6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, டித்வா (Ditwa) சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்காக, சவுதி அபிவிருத்தி நிதியத்திடமிருந்து (Saudi Fund for Development) இலங்கைக்கு மேலதிகமாக 6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சவுதி தூதுக்குழுவில் கடன் நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட நிபுணர் முகமது அல்-மசூத், சிரேஷ்ட கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சொகையர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேராவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அபிவிருத்திப் பாதை, டித்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் அனர்த்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரத்நாயக்க சவுதி அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்மைக்கால பொருளாதார முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சவுதி அபிவிருத்தி நிதியம் ஏற்கனவே இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதற்கு மேலதிகமாக, சித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதி உட்கட்டமைப்பு வசதிகளைப் பழுதுபார்ப்பதற்கும் புனரமைப்பதற்கும் என பிரத்தியேகமாக 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க நிதியம் ஒப்புக்கொண்டது.
இலங்கையின் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க சவுதி தூதுக்குழு விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திட்ட அமுலாக்கம் மற்றும் காலக்கெடு தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



