லால் காந்த ICCPR சட்டத்தை மீறி மகா சங்கத்தினரை அவமதித்துள்ளார் என பகிரங்க குற்றச்சாட்டு ..

லால் காந்த ICCPR சட்டத்தை மீறி மகா சங்கத்தினரை அவமதித்துள்ளார் – நாமல் ராஜபக்ஷ
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சர் கே.டி. லால் காந்த, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை (ICCPR சட்டம்) சட்டத்தை மீறி, பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் அவதூறு ஏற்படுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அண்மையில் மிகிந்தலை நாயக்க தேரர் வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரரை “வனச்சாரி” (காட்டுமிராண்டி) என அழைத்து அவமதித்துள்ளதாகவும், பௌத்த மதத் தலைவர் ஒருவரை இவ்வாறு அவமதித்ததை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின்படி, “யாதேனும் ஒரு நபர் போரைப் பரப்புவதோ அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்குத் தூண்டும் வகையிலான தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதோ கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லால் காந்த இங்கு மத வெறுப்பைப் பரப்பியுள்ளமை தெளிவாகத் தெரிவதாக நாமல் ராஜபக்ஷ கூறினார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், பௌத்தத் தலைவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அவதூறுகள் மற்றும் மத வெறுப்பைப் பரப்புவது குறித்து, இந்தச் சட்டத்தின் கீழ் லால் காந்தவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்னவென்று தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சாதாரண பிரஜை ஒருவரோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த எவரோ இவ்வாறு சட்டத்தை மீறியிருந்தால் இந்நேரம் அவர் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், லால் காந்த மத வெறுப்பைப் பரப்புவது மற்றும் மகா சங்கத்தினரை அவமதிப்பது குறித்து அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ சாடினார்.
அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இந்த முறையில் அவமதித்ததில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
