எனக்கு இன்னும் 5 வருடங்கள் மட்டும் ஆட்சிப் பொறுப்பைக் தாருங்கள்… 4 வருடத்தில் நாட்டின் பணிகளை நிறைவு செய்வேன்.
கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி மக்கள் இருந்தனர். பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஷபக்ஷ விலகினார். சஜித் பதவியை ஏற்பார் என்று நாம் நினைத்தோம். முடியாது என சஜித் அறிவித்தார். மறுநாள் சரத் பொன்சேக்காவை பதவி ஏற்கப் போவதாக அறிந்தோம். ஆனால் யாரும் ஏற்கவில்லை. அதன்பின்னர் கோட்டாபய எனக்கு அழைப்பு விடுத்தார். நான் தனியாகச் சென்றேன். பொறுப்பை ஏற்குமாறு இங்குள்ள எம்.பிகள் எனக்கு தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகிய போது எனக்கு பொறுப்பேற்ற வேண்டாம் என்றனர். அனைவரும் தப்பி ஓடினார்கள். அன்று நான் நாட்டைப் பொறுப்பேற்கவில்லையெனில், இன்னுமொரு பங்களாதேஷாக எமது நாடு மாறியிருக்கும். அந்த நிலையில் என்னை ரணில் ராஜபக்ஷ என்று அவர்கள் திட்டினார்கள். இன்று ராஜபக்ஷவினர் தனியாகச் சென்றுள்ளனர்.
5 வருடங்கள் தான் ஆட்சிப் பொறுப்பைக் கேட்கிறேன். 4 வருடத்தில் அந்தப் பணிகளை நிறைவு செய்வேன். வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் வாழ்க்கைச் செலவு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது, வரி நிவாரணம் வழங்குவது, அதிகளவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது,’உறுமய’, ‘அஸ்வெசும’ என்பவற்றை தொடர்வது என்பனவே எனது இலக்குகளாகும் என்றார்.