News

தேசிய மக்கள் சக்தி அரசின் வாக்கு வங்கி    சடுதியாக குறைந்துள்ளது –  தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடைவது உறுதி ; உதய கம்மன்பில

தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது. தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி 20 சதவீதமளவுக்குக் குறைவடைந்துள்ளது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய கல்வி மறுசீரமைப்பு பிற்போடப்பட்டமைக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கல்வி மறுசீரமைப்பைப் பிற்போடுமாறு நாங்கள் குறிப்பிடவில்லை.

குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளுமாறு மாத்திரமே குறிப்பிட்டோம். பாடத்திட்டம் தயாரிப்பின்போது தோற்றம் பெற்ற குறைபாடுகள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களினால் புதிய கல்விக் கொள்கை 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதாக பிரதமர் குறிப்பிடுகிறார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தின் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவதால் ஜனாதிபதியின் அறிவிப்புக்களைக் கவனத்தில்கொள்ள வேண்டாம் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆளுங்கட்சியின் உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசு குறிப்பிட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தல் குறித்து முன்னேற்றகரமான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்விடைவோம் என்பதை அரசு நன்கு அறியும். அதனால் தேர்தலை நடத்தாது. அரசின் வாக்கு வங்கி 20 சதவீதமளவுக்குக் குறைவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button