News

நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்க ரெடி – ஆனால் அதற்கு ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷர்களின் கொள்கையை ஏற்க வேண்டும் ; பொதுஜன பெரமுன அறிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் கொள்கையை நாட்டு மக்கள் இரண்டு முறை புறக்கணித்துள்ளார்கள். ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்வார்களா என்பது சந்தேகத்துக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் கொள்கையை ஏற்றால் அவருடன் கூட்டணியமைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி மறுசீரமைப்பில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன. சிங்கள தேசியத்துக்கும், நாட்டின் பாரம்பரிய கலை கலாசாரத்துக்கும் முரணான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. குறைகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.

கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பில் பொய்யுரைத்து தான் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த காலங்களில் போலியான விடயங்களை குறிப்பிட்டு தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்று அந்த பொய்கள் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து தற்காலிக அரச நியமனங்களையும் நிபந்தனையற்ற வகையில் நிரந்தரமாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரியே இன்று பலர் வீதிக்கிறங்கியுள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டார். அந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோற்றுவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கொள்கைக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசியத்துக்கு முன்னுரிமை என்ற கொள்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டால் அவருடன் அரசியல் கூட்டணியமைப்போம். இதில் எவ்வித பிரச்சினையும் எமக்கு கிடையாது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் கொள்கையை நாட்டு மக்கள் இரண்டு முறை புறக்கணித்துள்ளார்கள். ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்வார்களா என்பது சந்தேகத்துக்குரியது. எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய காலத்தில், நேரத்தில் அறிவிப்போம் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button