News

தேர்தல் நெருங்க நெருங்க சஜித்துக்கே மவுசு அதிகரிக்கிறது – மனச்சாட்சி உள்ளவர்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்; ரிஷாத் பதியூதீன்

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, முல்லைத்தீவில் இன்று காலை (02) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்ததாவது;

“சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள மக்கள் அலையைத் தடுத்து, திசை திருப்ப எந்த வேட்பாளர்களாலும் இனி இயலாது. எஞ்சியுள்ள காலங்களிலும் சஜித்துக்கான ஆதரவு அலைகள் உச்சம் தொடவுள்ளன. இந்நிலையில், வங்குரோத்து வாய்வீரர்களைக் களமிறக்கி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்படுகிறது. இந்த மண்ணுடனும் பிரதேசத்துடனும் பரிச்சயம் இல்லலாத பலர் வந்து வழங்கும் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.

யுத்தம் முடிந்த பின்னர், இப்பகுதிக்கு நானே வந்தேன். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் அமைச்சராகவும் பல வேலைகளைச் செய்தேன். மெனிக்பார்ம் முகாமில் மக்களைக் குடியேற்றினேன். காணிகள் இல்லாதோருக்கு காணி வழங்கினேன். வைத்தியசாலைகள், பாடசாலைகளை நிர்மாணித்தேன். ஆயிரம் பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இனம், மதம், கட்சி பாகுபாடின்றி இவற்றை நாம் செய்தோம். மனச்சாட்சி உள்ளவர்கள்  இவற்றைச்  சிந்தித்து, நாம் ஆதரிக்கும் வேட்பாளர் சஜிதுக்கே வாக்களிக்க வேண்டும்.

எஞ்சியுள்ள நமது அபிவிருத்தி வேலைகளைப் பூர்த்தி செய்ய, சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதியாக்க வேண்டும். தோற்கப்போவோருக்கு வாக்களித்து, ஜனநாயகத்தின் பெறுமானத்தை சீரழிக்காதீர்கள். நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது. கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாதமும் இறுமாப்புமே நமது பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கியது. விரட்டப்பட்ட கொடுங்கோலனின் எஞ்சிய ஆட்சிக்காலத்திலும் இனவாதிகளே இணைந்துள்ளனர்.

இதையறிந்துதான், தமிழ் தேசிய கூட்டமைப்பும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது. சமூகம்சார் கட்சிகளின் தீர்மானத்துக்கு எதிராகச்  செயற்பட்டு, சமூகத்தை காட்டிக்கொடுத்துவிடாதீர்கள். சஜித்தை தோற்கடிப்பது கொடுங்கோலனின் சகபாடிகளையே பலப்படுத்தும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிஷாந்த மற்றும் ஸ்ரீபால ஆகியோர் எம்முடன் இணைந்தமை இதனையே உணர்த்துகிறது” என்றார்.–

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button