முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினார் – நாட்டுக்கு நன்மை நடக்கும் நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று வருகிறேன் என மேலும் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
“தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை. எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றேன்” என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர்.
இவர் 2014 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றவர்.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த பின்னரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
அரகலயவின் பின்னர் அரசியல் ரீதியில் மைத்திரி அநாதையாக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெறவில்லை.
நான் இப்போது அரசியலில் ஈடுபடுவதில்லை. இந்த நாட்டிற்காக யாராவது நல்ல காரியங்களைச் செய்தால், அவர்களுக்கு நான் உதவி செய்வேன். நான் இப்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.
உண்மையில் கல்விச் சீர்திருத்தங்களை எனது அரசாங்கத்தின் காலத்திலேயே தொடங்கினேன். ஏனென்றால், பல்கலைக்கழக மாணவர்கள் பதாகைகளை ஏந்திக்கொண்டு வீதிகளிலும், சுற்றுவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம்.
முக்கியமாக, தொழில்நுட்ப உலகில் நாம் எவ்வாறு நவீனமடைய வேண்டும் என்பதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது அவசியம். அதன் முக்கிய அங்கமாக கல்வி திகழ்கிறது. எனவே, கல்வி என்பது அரசியல்வாதிகள் தலையிடக்கூடாத ஒரு விடயமாகும்.
கல்வி விவகாரங்களை கல்வியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அந்தப் பணிகள் கல்வியாளர்களால்தான் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வி பற்றிப் பேசும் போது, உலகின் எந்தவொரு நாட்டிலும் அந்த நாட்டின் சுதேசிய சிந்தனைக்கு ஏற்பவே கல்வி முறை கட்டியெழுப்பப்படுகிறது. ஏனைய வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் உள்ள சிறப்பம்சங்களை நாம் ஆலோசனைகளாகப் பெறலாம். அதற்காக ஆலோசகர்களை வரவழைக்கலாம், திட்டமிடலாம்.
இருப்பினும், எமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுதேசிய சிந்தனை ஆகியவற்றில் நாம் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்திற்காகக் கல்வியைக் கையாள்வது என்பது மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டிய ஒரு செயலாகும்.



