கிரிக்கட் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இன்றைய போட்டி .. அமெரிக்காவை துவம்சம் செய்து பழி வாங்குமா பாகிஸ்தான்? பாகிஸ்தானுக்கு மீண்டும் அதிர்ச்சியளிக்குமா அமெரிக்கா?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையேயான போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (பிப்ரவரி 7) தொடங்கியது.
பாகிஸ்தானுக்கு மீண்டும் அதிர்ச்சியளிக்குமா அமெரிக்கா?
நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் முதல் நாளில் இந்தியா – அமெரிக்கா இடையேயான போட்டியில் அமெரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள், அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் பேட்டர்களை திணறச் செய்தனர்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டியது என்பதோடு அமெரிக்காவுக்கு எதிரான தோல்வியைத் தவிர்த்தது என்றே கூறலாம். அந்த அளவுக்கு அமெரிக்க அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ஆனால், அந்த அணியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பேட்டிங் இல்லாததால் தோல்வியைத் தழுவியது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்கா முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரில் அறிமுகமானது. அறிமுகத் தொடரிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி கிரிக்கெட் உலகுக்கு தங்களது வரவை அழுத்தமாக அறிவித்தது அமெரிக்கா.
இந்த சூழலில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான போட்டி இன்று (பிப்ரவரி 10) கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியை திணறடித்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு எதிராக எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் நட்சத்திர பேட்டர்கள் இருந்தாலும், அவர்களது பேட்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பாபர் அசாமின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். சைம் ஆயுபின் பங்களிப்பும் பாகிஸ்தான் அணிக்கு தேவைப்படுகிறது.
அமெரிக்க அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் அவர்கள் அதிகம் கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வீரர்கள் தவறான ஷாட்டுகளை விளையாடியதாக அமெரிக்க அணியின் கேப்டன் மோனங் படேலே கூறியிருந்தார். அது மாதிரியான ஷாட்டுகளை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அமெரிக்க அணி இலங்கையில் பயிற்சி மேற்கொண்டுள்ளதால், அங்குள்ள ஆடுகளங்களின் தன்மை அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கும். இந்தியாவுக்கு எதிராக அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியது போன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டால் கடந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது போன்று, இன்று நடக்கும் போட்டியிலும் அதிர்ச்சியளிக்க வாய்ப்பிருக்கிறது.
பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் தனது தவறுகளை திருத்திக் கொள்ளுமா? அல்லது அமெரிக்காவின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



