அனுர, ரணில், மஹிந்த ஆகிய மூவருக்கும் நீதிமன்ற அழைப்பாணை.. பாலின மாற்றத்திற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிராக மனு..”

மருத்துவ அறுவை சிகிச்சைகள் மூலம் ஒரு நபர் தனது விருப்பத்திற்கு ஏற்ப பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதி அளித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள சட்டவிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான விடயங்களில் விளக்கமளிக்குமாறு கோரி முன்னாள் மற்றும் தற்போதைய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் (Notice) அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கா விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விடயங்கள் பரிசீலிக்கப்பட்டதோடு, எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி இம்மனுவை மீண்டும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிறப்பால் அமையும் உயிரியல் காரணிகளைப் புறக்கணித்து, வெறும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மாத்திரம் பாலினத்தை மாற்றுவதற்கு இந்நாட்டுச் சட்டத்தில் இடமில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2016ஆம் ஆண்டு சுகாதாரப் பிரிவினர் வெளியிட்ட அறிவுறுத்தல் கோவையின் அடிப்படையில், அறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக்கொண்டவர்களுக்கு புதிய பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்குவது சட்டவிரோதமானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான பாலின மாற்றங்களுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்குவதன் மூலம், சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஓரினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு மறைமுகமாக வழிவகுக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தீர்ப்பொன்று (Referendum) இன்றி இவ்வாறான தீர்மானமிக்க மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதமானது என இதற்கு முன்னர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றையும் அவர் இங்கு மேற்கோள் காட்டியுள்ளார்.
கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டங்களின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார். எனவே, பாலின அடையாளத்தை மாற்றுவதற்கு வசதிகளை வழங்கும் அனைத்து சுற்றறிக்கைகள் மற்றும் அரச கொள்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, தற்போதைய ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.



