“கிராமத்து அதிகாரம் இன்னும் மேல்தட்டு மக்களிடமே உள்ளது.. அந்த அதிகாரத்தையும் சாதாரண மக்களிடம் (மேல்தட்டு வர்க்கமல்லாதோர்) ஒப்படைக்கவே ‘பிரஜா சக்தி’ கொண்டுவரப்படுகிறது..”

கிராமங்களில் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினர் (Elite) வசமுள்ள அதிகாரத்தை சாதாரண மக்களிடம் (Non-elite) ஒப்படைப்பதற்காகவே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ‘பிரஜா சக்தி’ (Praja Shakthi) திட்டத்தை ஆரம்பித்துள்ளது என்று விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வள அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
“நாங்கள் பொருளாதார ஜனநாயகம் என்ற ஒரு சொல்லைப் பற்றி பேசுகிறோம். நாட்டின் ஒவ்வொரு மனிதனும் பொருளாதாரச் செயல்பாட்டில் உள்வாங்கப்பட வேண்டும். அவர்கள் அதில் இணைந்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நியாயமான பங்கு கிடைக்க வேண்டும். அத்தகைய ஒரு நாடு இன்னும் உருவாகவில்லை. அதாவது, கிராமத்தின் பொருளாதாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அந்த கிராமமே தீர்மானிக்கிறது. எனவே, இது ஒரு வகையில் கிராமத்திற்கு அதிகாரம் கிடைப்பதாகும்.
உண்மையில், தேர்தல் காலத்தில் எனக்குப் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்திய அந்த ஒரு விடயத்தைத் தவிர மற்ற அனைத்தும் இதில் கிடைக்கின்றன. கிராமத்திற்கு நீதித்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று நான் அன்று கூறினேன். அந்த நீதித்துறை அதிகாரத்தைத் தவிர, மற்றைய அனைத்துத் துறைகளிலும் உள்ள அதிகாரம் இதன் மூலம் பெருமளவிற்கு கிராமத்திற்குக் கிடைக்கிறது. தற்போது மக்கள் ஆட்சியாளர்களாக இல்லை, அந்த மேல்தட்டு வர்க்கத்தினரே (Elite) ஆட்சியாளர்களாக உள்ளனர்.
ஒரு முழு கிராமத்தின் நிர்வாகம் குறித்த பயிற்சியை இந்தத் திட்டத்தின் ஊடாக சமூகம் பெறுகிறது. அதன் மூலம் சமூகத்தை ஒரு நிர்வாக நிலைக்கு உயர்த்த முடியும். இப்போதும் கிராமங்களில் ‘பிரபுக்கள்’ (Elites) என்று ஒரு வர்க்கத்தினர் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களின் கையிலேயே ஆதிக்கம் உள்ளது.”
கண்டியில் நடைபெற்ற ‘பிரஜா சக்தி’ திட்டம் குறித்த விழிப்புணர்வு மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் கே.டி. லால்காந்த இவ்வாறு குறிப்பிட்டார்.



