ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வீட்டுக்கு அருகிலேயே கொலைகள் இடம் பெறுகிறதென்றால் அரசால் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முடியாது

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இல்லத்திற்கு அருகில் கொலைகள் இடம்பெறும் வேளையில் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“இந்த நாளாந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நிறுத்திவிட்டதாக அமைச்சர்கள் உரிமை கோருகின்றனர். இருப்பினும், அந்த முயற்சியில் அவர்கள் உண்மையில் தோல்வியடைந்துள்ளனர்” என்று ஊடகங்களிடம் பேசிய ராஜபக்ஷ கூறினார்.
அனைத்து முக்கிய தீர்மானங்களும் கட்சியின் தலைமையகமான பெலவத்தையிலேயே எடுக்கப்படுவதாக அமைச்சர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அக்குரெகொடவில் அண்மையில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பகுதியில் கொலைகள் இடம்பெறும் போது பொதுப் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.
நீதிமன்ற அறைக்குள் கொலை மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டத்தரணி ஒருவர் மீதான தாக்குதல் உட்பட கடந்த காலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் கூறினார்.
சட்டவிரோத கஞ்சா செய்கை சுற்றிவளைப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுமக்களின் உணர்வுகள் தங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் தனது எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு பொதுமக்களின் அழுத்தத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
அரகலய போராட்டத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்களை சிலர் விமர்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதித்துறை, வைத்தியர்கள் மற்றும் ஏனையோரை ஒடுக்குவதன் மூலம் தப்பிப்பிழைக்க முடியும் என்று அரசாங்கம் நம்பினால் அது வெற்றிபெறாது என்றும் ராஜபக்ஷ தெரிவித்தார்.



