News

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும்  சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின.



இதனைத் தொடர்ந்து குழு நிலையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர். அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டதுடன், இதன்போது சாமர சம்பத் அவர்கள் தனது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.



இதற்கு அமைய குறித்த சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 152 வாக்குகளும், முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.



அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சட்டமூலத்தின் 4ஆவது பிரிவுக்கு திருத்தம் முன்வைக்கப்பட்டதுடன், இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.



இந்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2026 ஜனவரி 07ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.



இச்சட்டத்தின் ஊடாக தேசிய அரசுப் பேரவையின் 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் நீங்குகின்றது. இதற்கு அமைய சட்டத்தின் 3வது பிரிவின் நியதிகளின் படி ஓய்வூதியமொன்றறைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவரானவரும் மற்றும் இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்றவருமான எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் தொடங்கும் தேதியன்றும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button