அமைச்சர்களின் புகைப்படங்கள் , கடிதங்களை பயன்படுத்தி மோசடியாக நிதி சேகரித்து வந்த தேரர் கைது

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பிக்கு ஒருவர் மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணை அதிகாரிகளால் செவ்வாக்கிழமை(17) கைது செய்யப்பட்டுள்ளார்.
முருதலாவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த போதே 21 வயதுடைய குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்ட, மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட பல கடிதங்களும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கடிதங்களில் சம்மந்தப்பட்ட இரண்டு அமைச்சுகளினதும் செயலாளர்களின் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



