கொள்ளையர்களுடன் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது – கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீளப் பெற்று அதனூடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம் ; சஜித்
ஊழல் மற்றும் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக தங்களது அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்துள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக எமது அரசாங்கத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் கொள்ளையிட்ட நாட்டின் சொத்துக்கள், தேசிய வளங்கள் மற்றும் நிதியங்கள் என்பவற்றை மீளப்பெற்று அதனூடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.
நிபந்தனைகளை விதித்து, பிரதமர் பதவியும், ஜனாதிபதி பதவியும் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் அதனைப் பொறுப்பேற்கவில்லை.
தற்போது நாம் ஆட்சியைப் பொறுப்பேற்காமைக்கான காரணம் அனைவருக்கும் தெளிவாகியிருக்கும்.
கொள்ளையர்களுடனும் மோசடிக்காரர்களுடனும் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.
அதேநேரம் எமது கல்வி வேலைத்திட்டம் தொடர்பில் எமக்கு எதிரான 2 குழுக்களும் ஒன்றிணைந்து பல விமர்சனங்களை முன்வைக்கின்றன.
சர்வதேச மற்றும் உள்நாட்டுச் செல்வந்தர்களின் நிதியுதவியுடன் நாட்டிலுள்ள 10,096 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய முடியாதென அவர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கல்விக் கொள்கையின் போது அவர்கள் எமது செயற்பாட்டை அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.