அயோத்தியிலுள்ள சிவன் கோயில் தலைமை தூதுக்குழுவினர் இலங்கைக்கு விசேட விஜயம் – வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவர்

அயோத்தியிலுள்ள சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் கைலாசானந்த கிரிஜி மஹராஜ் தலைமையிலான தூதுக்குழுவினர், விசேட விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை காலை இலங்கை வந்தடைந்தனர்.
புதுடெல்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-192 விமானம் மூலம் கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த 14 பேர் கொண்ட தூதுக்குழுவில் மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கியுள்ளனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இக்குழுவினரை சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க வரவேற்றார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது, இக்குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், நுவரெலியா சீதா அம்மன் கோயில் மற்றும் பொலன்னறுவையிலுள்ள பண்டைய சிவன் கோயில் தளங்கள் உள்ளிட்ட பல முக்கிய சிவன் கோயில்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த விஜயத்தின் போது வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இக்குழுவினர் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



