நிலக்கரி விவகாரம் தொடர்பாகத் தவறான தகவல்களை பரப்பிய நபர்களுக்கு எதிராக உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி CID யில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

சமீபத்திய நிலக்கரி சம்பவம் தொடர்பாகத் தவறான தகவல்களை முன்வைத்த நபர்களுக்கு எதிராக உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி ‘மகே ரட்டட’ (எம் நாட்டிற்காக) இயக்கத்தின் தலைவர் சஞ்சய மஹவத்த, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
அரசாங்கப் பத்திரிகையான தினமினவின் தகவல்படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடி விசாரணை நடத்தப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு பேராசிரியருக்கு எதிராக நேற்று (25) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
2017ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றின் திகதியை 2025 என மாற்றி முன்வைப்பது பாரிய குற்றமாகும் என சஞ்சய மஹவத்த இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது அரசாங்கத்தையும் நாட்டையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கி, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் எனத் தெரிவித்தார்.
எனவே, முறைப்பாட்டில் பெயரிடப்பட்டுள்ள மூவரையும் உடனடியாக அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மாற்றப்பட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும், அவை சந்தேகத்திற்குரியதாகக் காணப்படும் பட்சத்தில் தாமதமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
திகதியை வேண்டுமென்றே மாற்றுவது பாரிய குற்றமாகும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொய்க் கூற்றுக்களை வெளியிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
அதற்குப் பதிலாக, அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து இந்தத் தகவல்களைப் பொதுமக்களுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் சஞ்சய மஹவத்த மேலும் தெரிவித்தார்.



