News

ரமலான் காலத்திலும் மோசம் – தயிர்சட்டியை அழிக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவு

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் புதன்கிழமை நடைபெற்ற வாராந்த உணவு நிலைய பரிசோதனையின் போது, தயிர் விற்பனை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வர்த்தக நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு விற்பனை செய்யப்பட்ட தயிரின் தரம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அதே இரவே கௌரவ நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது தயிரின் நிலையை நேரில் பரிசீலித்த சம்மாந்துறை கௌரவ நீதவான், சம்பந்தப்பட்ட விற்பனையாளரை கடுமையாக எச்சரித்ததுடன், சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி தவணை இடப்பட்டது.

அதோடு, நேற்றைய தினம் மட்டுமே உணவு பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் தரமற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் செயல்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் எனவும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் சம்மாந்துறை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதித் திகதிகளை கவனமாகச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொதுச் சுகாதாரப் பணிகள் மக்களின் நலனுக்காக இடையறாது தொடரும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button