
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், வீட்டின் உரிமையாளர் நேற்று (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்போது குறித்த வீட்டில் தாலிக்கொடி,சங்கிலி,காப்பு உள்ளடங்களாக 15 பவுண் தங்க நகைகளும், 4 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட குறித்த நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் நயன்



