இஸ்ரேல் மீது ஈரான் தனது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது

ஈரான் தனது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்து வரும் இந்த நேரடி மோதல் நிலைமை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல், ஈரானிலிருந்து இஸ்ரேலுக்குள் குறைந்தது ஐந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலியர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவை இரவு முழுவதும் லட்சக்கணக்கான இஸ்ரேலியர்களை பாதுகாப்பு புகலிடங்களுக்குச் (shelters) செல்ல வைத்தன. இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுப்பதற்காகவும், இஸ்ரேலியர்களை புகலிடங்களிலேயே இருக்க வைப்பதற்காகவும், வெவ்வேறு நேரங்களில் இந்த ஏவுகணைகளைத் தொடர்ந்து ஏவுவதையே ஈரானியர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதலாம் வாரத்தில் ஈரானிலிருந்து இஸ்ரேலுக்குள் 1,000 ஏவுகணைகள் ஏவப்படலாம் என்று பாதுகாப்பு அமைப்பு எதிர்பார்ப்பதாக இராணுவம் மூலம் இஸ்ரேலியர்களுக்கு பல மதிப்பீடுகள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால் இவற்றில் 200 மட்டுமே இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டுள்ளன. இது ஏவுகணைகளை அனுப்பும் ஈரானிய திறனின் பலவீனத்தைக் காட்டுவதாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். இது தங்களது “செயல்பாட்டு வெற்றிகளால்” (operational successes) ஏற்பட்டதாக இஸ்ரேலியர்கள் நம்புகின்றனர்.



