ஹோர்முஸ் நீரிணை தொடர்பான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே பலமுறை அரசை எச்சரித்தோம்.. அவர்கள் கணக்கெடுக்கவில்லை – இப்போது எரிபொருளுக்கு QR code முறையை அறிமுகப்படுத்தும் நிலை வந்துள்ளது

அரசாங்கம் அகந்தை மற்றும் தொலைநோக்கு பார்வையற்ற தன்மையுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் நாடு மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
கேகாலை அமைப்பாளர் பிரியங்கா சேனநாயக்கவின் அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மக்கள் தற்போது பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும், QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்துவது எரிபொருள் நுகர்வை மட்டுப்படுத்த வேண்டியதைக் குறிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை பொதுமக்களின் விரக்தியை அதிகரிப்பதற்கும் மேலதிக பொருளாதார சவால்களுக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றங்களுடன் தொடர்புடைய சாத்தியமான இடையூறுகள் குறித்து எதிர்க்கட்சி பலமுறை எச்சரித்ததாகவும், ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியதாகவும், ஆனால் அமைச்சர்கள் அந்த எச்சரிக்கைகளை நிராகரித்ததாகவும் பிரேமதாச கூறினார்.
“அப்போதைய வெளிவிவகார அமைச்சர் கூறியது போல் நாட்டிற்கு உண்மையாகவே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மீண்டும் ஒரு QR குறியீடு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது,” என்று அவர் கூறினார்.
உதித்துவரும் அபாயங்களைக் கையாள்வதற்கான முறையான மூலோபாயத் திட்டமிடல் அரசாங்கத்திடம் இல்லை என்றும், உருவாகி வரும் சூழ்நிலைகளுக்கு அரசாங்கம் மிகவும் தாமதமாகவே பதிலளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை எனவும் அவர் குற்றம் சுமத்தியதுடன், இதன் விளைவாக மின் உற்பத்தி சுமார் 135 மெகாவாட்டினால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மோசமான நிர்வாகம் மற்றும் திறமையின்மை இறுதியில் QR அடிப்படையிலான கட்டுப்பாடுகள் ஏனைய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்று கூறிய பிரேமதாச, விவசாயிகளின் உரத்திற்கும் இதே போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.
நாட்டின் அழுத்தமான பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதை விடுத்து, அரசியல் பழிவாங்கல்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.



