News

சர்வதேச யுத்தங்களின் போது இலங்கை எப்போதும் நடுநிலை வகிக்கும் – நாங்கள் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்று வெளியிடப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது ; ஜனாதிபதி

சர்வதேச மோதலின் போது இலங்கை நடுநிலை வகித்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக உலக நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு நிலைமைகள் குறித்து ஜனாதிபதி பாராளுமன்றில் உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.



இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும்.



எமது தாய்நாட்டின் கௌரவம், நீதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் என்பவற்றை நாம் எமது நடுநிலைமையைப் பாதுகாப்பதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும்.



எனவே, எந்தவொரு அழுத்தத்தின் மத்தியிலும் இந்த நடுநிலைமை சீர்குலைய நாம் இடமளியோம்.



நாங்கள் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்றும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.



அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.



ஈரானின் இரண்டு கப்பல்களை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்குமாறு கடந்த மாதம் 26 ஆம் திகதி எங்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.



மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு நல்லெண்ண விஜயமாக குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வர விரும்புவதாக ஈரான் அதிகாரிகள் கோரினர்.



குறித்த கோரிக்கைக்கான அனுமதி வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.



அன்றைய தினம் மாலை வேளையிலேயே அமெரிக்காவும் ஒரு கோரிக்கையை முன்வைத்தது.



கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரினர்.



எமது மேசை மீது இரண்டு கோரிக்கைகள் இருந்தன.



ஒன்று மார்ச் 9-13 காலப்பகுதியில் ஈரானிய கப்பல்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதி, மற்றொன்று அமெரிக்க போர் விமானங்கள் மத்தளத்திற்கு வருவதற்கான அனுமதி.



நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன?



நாம் மிகவும் தெளிவான முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன.



எமது நாட்டின் நடுநிலைமையைக் கருத்திற்கொண்டு, நாங்கள் அந்த இரண்டு தரப்பினருக்குமே அனுமதி வழங்கவில்லை.



அதுதான் நடுநிலைமை.



ஈரானிய கப்பல்களுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்று சிலர் கேட்டதாக எனக்கு நினைவிருக்கிறது.



ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?



எமது ஒட்டுமொத்த நடுநிலைமையும் சீர்குலைந்திருக்கும்.



நாம் ஒரு தரப்பிற்கு சார்பாகச் செயற்படுவதாகக் கருதப்படும் அல்லது மற்றைய தரப்பிற்கும் அனுமதி வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.



அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் அருகாமையில் வந்திருக்கும்.



நாம் அதனைச் செய்யவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button