இனவாதம் என்னை ஜனாதிபதியாக வர விடாது
ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை எனவும் இந்நாட்டில் உள்ள இனவாதம் அதனை விடாது என ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
மூதூர் பட்டித்திடல் கிராமத்தில் இன்று(06) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இனவாதியும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருமே இம்முறை ஜனாதிபதியாக வரப்போகின்றார்.அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
இருப்பினும் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.கடந்த காலங்களில் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம். இம்முறையும் ஏமாற்றப்படுவதற்கு தயாராக இல்லை.
தமிழ் தேசிய பொதுக்கூட்டமைப்பு எடுத்த முடிவானது ஆரோக்கியமான முடிவென எம்மை சந்திக்கின்ற மக்கள் தெரிவிப்பதோடு அவர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும் தயாராக உள்ளனர்.யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த எமது பிரச்சாரத்தை தற்போது திருகோணமலையில் மேற்கொண்டு வருகின்றோம்.வடக்கு கிழக்கின் சகல பகுதிகளுக்கு சென்று தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
இதற்கு முன்னர் பொத்துவில்- பொலிகண்டிப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி உள்ளோம்.அவ்வாறே இதுவும் புள்ளடி இடுகின்ற போராட்டமாகும் எனவும் தெரிவித்தார்.