News

பொய் கூறுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தெரன Tv திலித் ஜயவீர தெரிவிப்பு

அரசாங்கத்தின் அறியாமையுடன் கூடிய ஆணவமே பிரச்சினைகளை உக்கிரமாக்கி யுள்ளதாகவும் இந்தச் சூழ் நிலையை எதிர்கொள்ள வேண்டுமெனில் இந்த அரசாங்கம் பொய் கூறுவதை நிறுத்திவிட்டு உண்மையை மக்களுடன் கலந்துரையாட ஆரம்பிக்க வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார்.



கொழும்பிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்.



மோதல் நிலைமை ஆரம்பமாவதற்கு முன்னரே இந்த வலயத்தில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தேசிய முன்னாயத்தம் தொடர்பில் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். தேசிய முன்னாயத்தம் என்பதில் பிரதானமான விடயம் என்னவென்றால் நம்பகத் தன்மையை வெற்றி கொள்வதாகும்.



எரிபொருள் விலை, எரிபொருள் தொகை ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்த்திலுள்ள முக்கியமான அமைச்சர்கள் நால்வர், நான்கு விதமாக கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். ஜனாதிபதியின் மொழியில் கூறுவதென்றால், “அவர்களை நம்பாதீர்கள். என்னை நம்புங்கள். அவர்கள் உதவியாளர்கள்” என்று கூறுகிறார்.



ஆனால், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து முன்வைத்த உரையில் தேசிய முன்னாயத்தம் தொடர்பிலான மூலோபாய அறிவித்தலொன்றோ, சவால்களை எதிர்கொள்ளவேண்டிய அல்லது எடுக்கக்கூடிய அறிவிப்போ குறிப்பிடப்படவில்லை. அறியாமையுடன் கலந்த ஆணவமே இந்தப் பிரச்சினைகளுக்குப் பெரும் காரணமாக மாறியுள்ளது.



அமெரிக்காவிலிருந்து விமானங்கள் இரண்டை அனுப்ப முயற்சித்தார்கள். நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் என்று இந்த நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து கூறுகிறார். அவரின் அந்தக் கருத்து உண்மையென்றால் அதனால் ஏற்படும் பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.



போர் மூலாதாரங்களை இலங்கையில் நிறுத்துவதற்கு அமெரிக்கா இலங்கையிடம் கோரியிருந்ததா? அவ்வாறு கோரியிருந்தால், எதனடிப்படையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது? இதற்கு திருட்டுத்தனமாக கைசாத்திடப்பட்ட ஒப்பந்தமும் காரணமாக அமைந்ததா? இல்லையா? இராஜதந்திர மட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதா ? அல்லது தனிப்பட்ட ரீதியில் முன்வைக்கப்பட்டதா?



ஒரு மக்கள் பகுதியினரை சந்தோஷப்படுத்தும் கருத்துகளை முன்வைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கிறார். மறுபுறம் கீழுள்ளவர்களும் நாங்கள் அமெரிக்கர்களுக்கு பயமில்லை போன்றதொரு கருத்தை முன்வைப்பார்கள். இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டுமெனில் பொய் கூறுவதை நிறுத்திவிட்டு உண்மையை மக்களுடன் கலந்துரையாட ஆரம்பிக்க வேண்டும்.



QR குறியீட்டை அமுல்படுத்துவதற்கும் போலியாக நாடகமொன்றை அரங்கேற்றி னார்கள். இவ்வாறு நகைச்சுவையான விடயங் களை செய்யக் கூடாது. இந்த விடயங்களைச் சமாளிக்க தேசியத் திட்டமொன்று அவசியமாகும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button