News

இந்த தேர்தல் ஓட்டத்தில் சஜித் பிரேமதாச வெற்றிக் கோட்டை அண்மித்து விட்டார், அனுரகுமார தோற்பதே நிச்சயம் ; ரிஷாத் பதியுதீன்

ஊடகப்பிரிவு –

அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, சனிக்கிழமை (07) திருகோணமலை, புல்மோட்டையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தலை நாடு எதிர்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் என்பவை இந்தத் தேர்தலின் முடிவிலேயே தங்கியுள்ளது. எனவே, மிகக் கவனமாகச் சிந்தித்து தீர்மானமெடுக்க வேண்டிய தருணத்துக்கு நாம் வந்துள்ளோம். ஆசை வார்த்தைகள் மற்றும் அவசரப்புத்திகளுக்கு அடிமைப்படாமல் எம்மைச் சுதாகரித்துக்கொள்வதும் அவசியம்.

இளைஞர்களுக்கு இவ்விடயத்தில் அதிக நிதானம் அவசியம். ஒருசில இளைஞர்களின் தடுமாற்றப்புத்தியாலும் இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாலுமே, ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. சகல முஸ்லிம்களையும் சந்தேகக்கண் கொண்டும் அடிப்படைவாத சந்தேகத்துடனும் பிறர் எம்மைப் பார்க்கும் அபாயச் சூழல், இத்தாக்குதலின் பின்னரேயே ஏற்பட்டது. பள்ளிவாசல்களுக்குள்ளும் எமது வீடுகளுக்குள்ளும் மோப்பநாய்களைக் கொண்டுவந்து தேடுதல் நடத்தப்பட்டது. அரபு மத்ரஸாக்கள் ஆயுதப் பயிற்சிக் கூடங்களாக சந்தேகிக்கப்பட்டன. புனித குர்ஆன்களை ஒளித்து வைக்கும் நிலையும் எமக்கு ஏற்பட்டது. அநியாயமாக நாம் கைதிகளாக்கப்பட்டோம். ஏன்? ஒரு சில இளைஞர்கள் சலன புத்திக்குப் பலியானதாலே!

சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திலோ அல்லது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்திலோ எமது இளைஞர்கள் பங்கேற்றதில்லை. தேசப்பற்றுடன் நடந்துகொள்வதால், நமது நம்பிக்கை மற்றோரிடத்தில் பெறுமதியாகவே உள்ளது. இதைக் குலைப்பதற்கு இளைஞர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது.

எத்தனை பேர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் இருவரே களத்தில் ஓடுகின்றனர். ரணில் விக்ரமசிங்க ஆடுகளத்தில் கூட இல்லை. தேசியப்பட்டியலில் எம்.பியாக வரமுயற்சிக்கும் அமைச்சர் அலிசப்ரி போன்றோரே, ரணிலை ஆதரிக்குமாறு ஆசை வார்த்தைகள் பேசுகின்றனர். மைதானத்திலேயே இல்லாத ஒருவரை வீரனாகப் பார்ப்பது எப்படி? வெற்றிக் கம்பத்தை எட்டும் தூரத்தை அண்மிக்கிறார் சஜித் பிரேமதாச. இந்த ஓட்டத்தில் அனுரகுமார தோற்பதே நிச்சயம்” என்று கூறினார்.


Media office of Hon. Rishad Bathiudeen.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button