அரசாங்கம் நாட்டின் பொது திறைசேரியை சூறையாடி JVP கணக்குகளை நிரப்புகிறது – இதனால் மக்களுக்கு துணி துவைப்பதற்குக் கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என பொதுஜன பெரமுன தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொது திறைசேரியை சூறையாடிக்கொண்டு, தமது அரசியல் தலைமையகமான பெலவத்தையின் கணக்குகளை நிரப்பி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் பொய்களையும் பயன்படுத்தி, அந்தப் பழிப்பாவங்களை மக்கள் மீது சுமத்திவிட்டு தீர்வின்றி தவிக்க விடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது ஆற்றிய உரைகளுக்கும், இன்று அவர் வகிக்கும் ஜனாதிபதி பதவியின் செயற்பாடுகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுகின்றது.
மக்கள் இன்று இந்த முரண்பாட்டால் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
76 வருடங்களாக நாட்டைப் பிரபுத்துவ வர்க்கமே சீரழித்தது எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ஏழை எளிய மக்களை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்குவது ஏன்.
மின்சார நெருக்கடி, இது யுத்தத்தால் ஏற்பட்டதல்ல.
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்களே இதற்குக் காரணம் என்றும், அதன் சுமையை மக்கள் இன்னும் எரிபொருள் விலையின் ஊடாகச் சுமந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் சம்பூர் மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு மற்றும் எல்.என்.ஜி மின் நிலையத் திட்டங்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தி, நாட்டின் எரிசக்தித் துறையைச் சீரழித்த பெருமை ஜே.வி.பியையே சாரும்.
மக்களுக்கு துணி துவைப்பதற்குக் கூட வழியில்லாத நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
வெறும் மேடைப் பேச்சுகளால் மாத்திரம் நாட்டை ஆள முடியாது என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள தெரிவித்துள்ளார்



