சுனில் ஹந்துன்னெத்தியின் சொகுசு வாகனப் பயணம் குறித்து சேன நாநாநாயக்க எம்.பி விளக்கம்

தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ‘லேண்ட் குரூஸர்’ (Land Cruiser) ரக சொகுசு வாகனத்தில் பொலன்னறுவைக்குச் சென்றது தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள வாதவிவாதங்கள் குறித்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாநாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு பலவீனத்தை முன்னிலைப்படுத்தி, அதன் மூலம் மக்களைத் தூண்டிவிடவே எதிர்க்கட்சிகள் எப்போதும் முயற்சிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு இல்லாத வரப்பிரசாதங்களோ அல்லது வசதிகளோ தமக்குத் தேவையில்லை என தேசிய மக்கள் சக்தி இதற்கு முன்னர் தெரிவித்திருந்த கருத்துக்கள் உண்மையானவை என்றும், அவை பொய்கள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆயினும், சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படக்கூடும் என்றும், இவ்வாறான சில விடயங்கள் முன்னுக்குப் பின்னாகவோ அல்லது ஏற்ற இறக்கத்துடனோ அமைய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுனில் ஹந்துன்னெத்தி பயணித்த அந்த வாகனம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த சேன நாநாநாயக்க, “அது சிலவேளை அந்த நேரத்தில் பயன்படுத்துவதற்காக யாராவது ஒரு நபரால் வழங்கப்பட்ட (நன்கொடை) வாகனமாக இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.



