எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வாரத்திற்கு இரண்டு நாட்கள் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ அமுல்படுத்த பாகிஸ்தான் அரசு பரிசீலனை

எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வாரத்திற்கு இரண்டு நாட்கள் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ (smart lockdown) அமல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.
நாடு முழுவதும் எரிசக்தி மற்றும் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் ஸ்மார்ட் லாக்டவுன் விதிப்பது குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர், இது குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த முன்மொழிவு மாகாண அரசாங்கங்களுக்கும், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் அதிகாரிகளுக்கும் பகிரப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவித்தன.
பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், சனிக்கிழமை நண்பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இக்காலக்கட்டத்தில் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்படும், அதே நேரத்தில் சந்தைகள், அலுவலகங்கள் மற்றும் பிற அத்தியாவசியமற்ற சேவைகள் மூடப்பட்டிருக்கும்.
அதிகப்படியான நுகர்வு காலங்களில் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிசக்தி வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாகாணங்களுடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன் முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த ஸ்மார்ட் லாக்டவுன் ஏப்ரல் 4 முதல் நடைமுறைக்கு வரக்கூடும்.



