News

பாடசாலை மாணவர்களுக்கு அடிப்பது (உடல் ரீதியான தண்டனை வழங்குவது) மற்றும் உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது – கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது

மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது மற்றும் எந்த வகையிலான உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒழுக்கத்தைப் பேணுவது குறித்து ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகிகளுக்கும் தெளிவான வழிகாட்டுதல் அவசியம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கல்வி அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒழுக்கக் காரணங்களுக்காகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவோ எந்தவொரு குழந்தையும் உடல் அல்லது உள ரீதியான தண்டனைக்கு உள்ளாக்கப்படக் கூடாது என அமைச்சு தெரிவித்துள்ளது.

உடல் ரீதியான தண்டனைகளுக்கு எதிராக ‘பூச்சிய சகிப்புத்தன்மை’ (zero tolerance) கடைபிடிக்கப்படும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவுறுத்தலானது 2016 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்ட 12/2016 இலக்க சுற்றறிக்கையைக் குறிப்பிடுவதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராக பொது அதிகாரிகளை நிர்வகிக்கும் 461/2012 ஸ்தாபனக் கோவையின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.


மாணவர்களின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில், நடைமுறையிலுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஒழுக்கம் பேணப்படுவதை உறுதி செய்யுமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த அறிவுறுத்தல் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக மாகாண கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button