அமைச்சர் லால் காந்தவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் முறைப்பாடு !!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, சமூக ஆர்வலர் அபீத எதிரிசிங்கவினால் இலங்கை பொலிஸாரின் 1818 விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலக்கத்தின் ஊடாகவே அபீத எதிரிசிங்க இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
அந்த முறைப்பாட்டின்படி, இந்த வீடு கடுவெல வெலிவிட்ட வீதி, ஜுசே மாவத்தையில் 30 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி வீடாகும்.
‘டார்க் ரூம்’ (Dark Room) எனும் யூடியூப் அலைவரிசையினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மேற்கோள் காட்டி எதிரிசிங்க குறிப்பிடுகையில், குறித்த காணியின் பெறுமதி மாத்திரம் 30 மில்லியன் முதல் 51 மில்லியன் ரூபா வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சொத்து அமைச்சரின் மகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது மகளின் கல்வி நடவடிக்கைகளுக்குக் கூட போதுமான பணம் தன்னிடம் இல்லை என அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்த பின்னணியில், இவ்வாறானதொரு பாரிய சொத்தை எவ்வாறு ஈட்டினார் என்பது குறித்து பலத்த சந்தேகம் எழுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யூடியூப் அலைவரிசையொன்றில் வெளியான தகவல்களின் அடிப்படையில் முறைப்பாடு செய்வது குறித்து கருத்து தெரிவித்த அபீத எதிரிசிங்க, சனல் 4 (Channel 4) அலைவரிசையின் வெளிப்படுத்தல்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தப்படுமானால், இந்த வெளிப்படுத்தல் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
இது குறித்து நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி, இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கான பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை வெளிப்படுத்துமாறு அவர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



