நோன்பு, ஹஜ், பெருநாள் போன்றவற்றுக்கு பிறை பார்த்து அறிவிக்கும் அதிகாரம் அ.இ. ஜம்மியதுல் உலமாவுக்கோ, கொழும்பு பெரிய பள்ளிக்கோ இல்லை என்பதையும் அரச திணைக்களமான முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மட்டுமே இவற்றை அறிவிக்க வேண்டும்

நோன்பு, ஹஜ், பெருநாள் போன்றவற்றுக்கு பிறை பார்த்து அறிவிக்கும் அதிகாரம் அ.இ. ஜம்மியதுல் உலமாவுக்கோ, கொழும்பு பெரிய பள்ளிக்கோ இல்லை என்பதையும் அரச திணைக்களமான முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மட்டுமே இவற்றை அறிவிக்க வேண்டும் என்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிறை பார்த்து அறிவிக்கும் அதிகாரம் பெரிய பள்ளிக்கு பிரித்தானியர் ஆட்சியில் இருந்தாலும் இப்போது முஸ்லிம் சமய திணைக்களம் இருப்பதால் அதற்கே அந்த அதிகாரம் வழங்க வேண்டும்.
இலங்கை பிரித்தானியரின் கீழ் இருந்த போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா என்பது உருவாகியிருக்கவில்லை.
பிரித்தானியர் அந்தந்த மத விவகாரங்களை அவர்களின் கிறிஸ்தவ கலாசாரத்துக்கு ஏற்ப அதிகாரங்களை மத ஆலயங்களுக்கு வழங்க முன் வந்தனர்.
கிறிஸ்தவர்களை பொறுத்த வரை அவர்களின் மத அதிகாரம் பெரிய சேர்ச்சுக்கே உண்டு.
அது போல் பௌத்த மத விடயங்களை பார்க்க பௌத்த மகா சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இது போல் கொழும்பு முஸ்லிம்கள் சம்பந்தமான விடயங்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
கொழும்பில் பிறை கண்டால் கொழும்பு முஸ்லிம்களுக்கு கொழும்பு பெரிய பள்ளி நோன்பை அறிவிக்கும்.
இதுபோல் கொழும்புக்கு வெளியே ஊர்களிலும் அந்தந்த ஊர் பெரிய பள்ளிவாயல்கள் இவ்வறிவிப்பை செய்தன.
1920 களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட போதும் அதற்கு பிரித்தானியர் எந்தவொரு அதிகாரமும் வழங்கவில்லை.
1950க்கு பின் வானொலி தேசியமெங்கும் வியாபித்த போது கொழும்பு பெரிய பள்ளியின் பிறை அறிவித்தல் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அ.இ. ஜம்மியதுல் உலமா அரசாங்கத்தில் பதிவு பெற்ற பின் மத விவகாரங்களை தன் கைக்கு எடுத்தது.
அது போல் பிறை அறிவித்தலையும் கையிலெடுத்த போது கொழும்பு பெரிய பள்ளி தரப்பு இதை விட்டுக்கொடுக்க மறுத்தது.
இதனால் இரு தரப்புக்கும் பிணக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் 1970களில் இலங்கை அரசாங்கம் முஸ்லிம் சமய விவகாரத்துக்கென தனியான அமைச்சை உருவாக்கியது.
ஆனாலும் அது அரசியல் தரப்பு அமைப்பு என்பதால் பெரிய பள்ளியுடனும் ஜம்மியதுல் உலமாவுடன் முரண்பட விரும்பாமல் இது விடயத்தில் நேரடியாக தலையிடுவதை தவிர்த்துக்கொண்டது.
2000ம் ஆண்டுகளில் பிறை அறிவித்தல் விடயத்தில் இம்மூன்று தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்தது.
அதாவது, எந்த மாதம் நோன்பு வரும் என்பதை வானியல் அறிவின் படி முஸ்லிம் விவகார அமைச்சு அரசுக்கு அறிவித்து அதை கலண்டரில் பதிவிடுவது.
அ.இ. ஜம்மியதுல் உலமா பிறைக்குழு அமைத்து தமது கிளைகள் மூலம் பிறை கண்ட சாட்சியத்தை பெற்று அதை தனியே அறிவிக்காமல் பெரிய பள்ளியில் வைத்து அறிவிப்பதன் மூலம் பெரிய பள்ளியையும் சமாளிப்பது.
என்னதான் பிறை தேடுவதாக மக்களிடம் நடித்தாலும் அரச திணைக்களம் அரசுக்கு கொடுத்த கலண்டர் படி அறிவித்து அரசாங்கத்தையும் சமாளிப்பது.
இதுதான் இதுவரையான நடப்பு.
இதனை வெளியில் சொல்லாமல் மக்களுக்கு நடிப்பதால் மக்கள் கலண்டர் சொல்லாத நாளில் பிறை கண்டால் அதை எப்படியாவது தட்டிக்கழித்து அரச தினத்துக்கு ஏற்ப அறிவித்து விடுவார்கள்.
ஆனால் 2010களின் பின் இன்டர்நெட், பேஸ்புக், வட்சப் வந்தபின்தான் அ.இ.ஜம்மியதுல் உலமாவினதும் பெரிய பள்ளியினதும் தலையில் இடி விழுந்தது.
மக்கள் விழித்துக்கொண்டனர். இந்த மூன்று அமைப்பும் பிறை விடயத்தில் மக்களை ஏமாற்றி கண்ட பிறையயும் மறைத்து அரச கலண்டர்படியே பிறையை அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டதால்தான் பிறை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இப்போது இம்மூன்று அமைப்புக்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
பிறை என்பது முழு உலகுக்கும் ஒரு பிறைதான், சூரியன் உதிக்கும் நாடுகள் அனைத்திலும் ஒரே நாளில் பிறை தெரியும் என்பதே உண்மை.
இனியும் இம்மூன்று தரப்பும் மக்களை ஏமாற்றாமல் ஒன்றில் அரசாங்க வானியல் அறிவித்தல் பிரகாரம் நோன்பு, ஹஜ் போன்றவற்றை அரச திணைக்களம் அறிவிக்க வேண்டும்.
அல்லது நவீன சாதனங்கள் மூலம் மேகத்துக்குள் ஒளிந்திருக்கும் பிறையை காண வேண்டும்.
அல்லது முன்னேற்றம் பெற்றுள்ள பெரும்பான்மையான நாடுகளின் தற்போதைய நிலையான மக்கா பிறை அறிவித்தலை அறிவிப்பது பற்றி அரசு ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா சபை கோரிக்கை விடுக்கிறது.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா சபை.
கல்முனை.



