நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மட்டுமே இணைந்து கொள்வோம், ராஜபக்சேக்களுடன் ஒரு போதும் சேர மாட்டோம் என சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியில் இருந்து அறிவிப்பு வெளியானது

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) மாத்திரமே எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கைகோர்க்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
“நான் ஒரு பெண்ணுடன் சேர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். தந்தை எதிர்க்கிறார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறோம். தந்தை நோய்வாய்ப்படுகிறார், நாங்கள் தந்தையைப் பார்க்க பூர்வீக வீட்டிற்கு வந்திருக்கிறோம்.
எனவே, நாம் தந்தையின் வீட்டில் தங்கலாம், இல்லையா?” என்று ஐக்கிய தேசியக் கட்சியை பூர்வீக வீடு என்று வர்ணித்து மரிக்கார் கூறினார்.
பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,
வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்டதும், எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இல்லாததுமான ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டை வங்குரோத்தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒருபோதும் கைகோர்க்காது எனத் தெரிவித்தார்.
“இலங்கையை வங்குரோத்தாக்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே பொறுப்பு என நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் எங்களால் கூட்டணி அமைக்க முடியுமா?” என ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவை விளக்கி அவர் மேலும் கூறினார்.


