“யுத்தம் காரணமாகவே எரிவாயு விலை அதிகரித்தது.. நாம் விரும்பி விலையை உயர்த்தவில்லை..” – தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி அவர்களின் ஊடக அறிக்கை
“சர்வதேச நிலவரங்கள் குறித்து எமது நாட்டின் எதிர்க்கட்சிக்கு புரிதல் இல்லாத காரணத்தினால் அவர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் புனைக்கதைகளை உருவாக்கியும், உண்மைகளைத் திரிபுபடுத்தியும் நாட்டு மக்களைத் தூண்டிவிட்டு வருகின்றனர்” என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்தார்.
ஹற்றன் இலங்கை போக்குவரத்துச் சபையின் (CTB) டிப்போவில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
சர்வதேச நெருக்கடியும் எரிபொருள் விலையேற்றமும்
“நாட்டிற்குள் சில உள்நாட்டுப் பிரச்சினைகள் இருப்பதை நாம் அறிவோம். அதேபோல் சர்வதேச ரீதியாகவும் பிரச்சினைகள் எழுகின்றன. இது சாதாரணமானது. எம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விடயங்களும் உள்ளன, கட்டுப்படுத்த முடியாத விடயங்களும் உள்ளன.
தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் பாரிய பதற்ற நிலை மற்றும் போர்ச் சூழல் பற்றி அனைவரும் அறிவர். ஒரு நாளைக்கு 5 பில்லியன் லீற்றர் அல்லது 5 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வீணாகும் அளவிலான போர் ஆரம்பமாகியுள்ளது. இந்த போரின் பயங்கரத்தினால் ஹோர்முஸ் (Hormuz) கடற்பாதை தடைப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளும் இந்தப் போரில் சிக்கியுள்ள இந்த சிக்கலான நேரத்தில், சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக விலைச் சூத்திரத்திற்கு அமைய விலைத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.”
எரிவாயு விநியோகம் மற்றும் விலை நிலவரம்
“எரிவாயு என்பது எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது அல்ல. அது ஹோர்முஸ் கடற்பாதை ஊடாகவே இந்தியப் பெருங்கடலுக்கு வர வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்குச் செல்லும் அந்தப் பாதையில் உள்ள தடைகளுக்கு மத்தியிலேயே நாம் எரிவாயு விநியோகத்தைப் பெற வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசைகளில் உயிரிழந்தனர், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து மக்கள் இறந்தனர். அந்த யுகத்தை நாம் முழுமையாகத் தோற்கடித்துள்ளோம். தற்போது சர்வதேச சந்தை விலைக்கு அமைய இலங்கையில் விலையை மாற்றியமைக்கும்போது விலை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. இது அனுர சகோதரரோ, அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ விரும்பிச் செய்யும் ஒன்றல்ல.
சர்வதேச நெருக்கடியால் விலை அதிகரித்துள்ளதே தவிர, விநியோகம் தடைப்படவில்லை. தற்போது 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பை நாம் மாலைதீவில் சேமித்து வைத்துள்ளோம். ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை இலங்கையின் தேவைக்காக அது கொண்டுவரப்படுகிறது. மே மாதம் வரை தடையின்றி எரிவாயு வழங்க எம்மால் முடியும்.”
எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மற்றும் மக்களின் பொறுப்பு
“எதிர்க்கட்சியினர் சர்வதேச அல்லது உள்நாட்டு நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல் மக்களைத் தூண்டிவிட்டு வீதிக்கு இறக்க முயற்சிக்கின்றனர். கடந்த காலங்களில் எண்ணெய் வரிசைகளுக்கு மத்தியில் சில ஊடக நிறுவனங்கள் மக்களைத் தூண்டிவிட முயன்றபோது, மக்கள் அவர்களுக்குப் பொருத்தமான பாடத்தைப் புகட்டி அந்த நிறுவனங்களை நிராகரித்தனர். இப்போது எரிவாயு விலை உயர்வைக் காட்டி மீண்டும் மோதல்களை உருவாக்கப் பார்க்கிறார்கள்.
2021-2022 காலப்பகுதியில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 500 டொலராக இருந்தது. ஆனால் 2026 ஏப்ரல் ஆரம்பத்தில் சர்வதேச சந்தையில் அது 700 டொலரைத் தாண்டியுள்ளது. இந்த அதிகரிப்பை நாட்டுக்குள் கையாளும்போது விலை உயர்வு தவிர்க்க முடியாதது.
எனவே, இந்த இக்கட்டான சில மாதங்களை மக்கள் மிகவும் சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்:
• ஒரு மாதத்திற்குப் பயன்படுத்தும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
• மின்சாரம் மற்றும் எரிவாயுவை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள்.
பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்வையும் வழமைக்குக் கொண்டுவர அனைவரும் புத்திசாலித்தனமாகச் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சியின் புலம்பல்களை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்.”
மின்சார உற்பத்திப் பிரச்சினை
“இலங்கையின் மின்சார உற்பத்தியில் 50% நீரின் மூலமே பெறப்படுகிறது. தற்போது காசல்ரீ நீர்த்தேக்கம் விளையாட்டு மைதானம் போல் வறண்டு போயுள்ளது. மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்மின் உற்பத்தித் திறன் குறைகிறது. இதற்கு மாற்றீடாக டீசல் மூலமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

