அரசாங்கத்தின் 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி போதாது… நிவாரணப் பொதி அதிகரிக்கப்பட வேண்டும்- Economic multiplier effect பற்றி முறையான புரிதல் இருக்க வேண்டும் – MOP மற்றும் TSP உரங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது ; அரசை குற்றம் சுமத்துகிறார் சஜித்

38 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த அரசாங்கம், ஐக்கிய மக்கள் சக்தியின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகவே மக்களுக்கு நிவாரணப் பொதியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, பொருளாதார அழுத்தம் மற்றும் கஷ்டங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சிகள் பல வாரங்களாக அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் வலியுறுத்தி வந்ததாகக் கூறினார்.
இதுவரை செயலற்றிருந்த அரசாங்கம், திடீரென வாக்குறுதிப் பட்டியலுடன் முன்வந்துள்ள அதேவேளை, எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். ‘திட்டுவா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு, காணி மற்றும் நிதி உதவி உள்ளிட்ட இதேபோன்ற வாக்குறுதிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட போதிலும், அந்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை எனவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய நிவாரண நடவடிக்கைகளை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் மேலும் விரிவுபடுத்தப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை ஜனாதிபதி தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரேமதாச, எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை ஏற்கனவே எழுப்பிய போதிலும் அரசாங்கப் பிரதிநிதிகள் அதனை நிராகரித்திருந்தனர் என்றார். முந்தைய நாள் உட்பட மின் உற்பத்தி நிலையத்தில் காணப்பட்ட குறைந்த மின் உற்பத்தியே இப்பிரச்சினைக்கு சான்று என்றும், ஒரு அரசாங்கத்தின் கீழ் இவ்வளவு குறைந்த அளவிலான மின் உற்பத்தி இடம்பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
பொருளாதாரத்தை சுருக்குவதன் மூலம் இலங்கை தனது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என்று வாதிட்ட எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரப் பெருக்கி விளைவு (multiplier effect) பற்றி முறையான புரிதல் இருந்திருந்தால், பணச் சுழற்சியைக் குறைத்து வளர்ச்சியைப் பலவீனப்படுத்துவதை விட உற்பத்தி மற்றும் சேவைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்த அவர், ஒப்பந்தத்தைத் திருத்துவதாக அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்த போதிலும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகக் கூறினார். எதிர்க்கட்சிகள் எப்போதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறே நாணய நிதியத்திடம் கோரியதாகவும், மக்களை தியாகம் செய்ய ஒருபோதும் முனையவில்லை என்றும் கூறிய அவர், தற்போது எதிர்க்கட்சிகள் நாணய நிதியப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.
அரசாங்கத்தின் 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி போதுமானதல்ல என விமர்சித்த அவர், எரிவாயு நுகர்வோர் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 2.5 மில்லியன் மக்கள் போதிய ஆதரவைப் பெறவில்லை என்றும் கூறினார். நிவாரணப் பொதி அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரிய அவர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வரி முன்மொழிவுகள் நுகர்வோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை அரசாங்கம் புறக்கணித்து வருவதாகத் தெரிவித்த பிரேமதாச, உத்தியோகபூர்வ மறுப்புகளுக்கு மத்தியிலும் யூரியா மட்டுமன்றி, MOP மற்றும் TSP உரங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகக் குறிப்பிட்டார்.



