எனது மொத்த மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 395,861.22 ரூபா (சுமார் 4 இலட்சம்)… அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன் பொதுமக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என சம்பளப் பட்டியலை வெளியிட்டு அர்ச்சுனா M.P தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் எனக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது 2026 மார்ச் மாதத்திற்கான நாடாளுமன்ற சம்பளப் பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ஆவணத்தின்படி, மொத்த மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 415,169.93 ரூபாவாகும். இதிலிருந்து 19,308.71 ரூபா கழிக்கப்பட்ட பின்னர், அவரது கணக்கில் 395,861.22 ரூபா நிகர சம்பளமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.
சம்பள விபரங்களின்படி, மாதாந்த கொடுப்பனவு 54,285 ரூபா, தொலைபேசி கொடுப்பனவு 50,000 ரூபா, போக்குவரத்து கொடுப்பனவு 15,000 ரூபா, அலுவலக கொடுப்பனவு 100,000 ரூபா, எரிபொருள் கொடுப்பனவு 179,707.93 ரூபா மற்றும் அமர்வு கொடுப்பனவு 15,000 ரூபா உட்பட ஏனைய கொடுப்பனவுகளும் இதில் அடங்கும்.
வருமான வரி, வீட்டு வாடகை, மின்சாரம், நீர் மற்றும் இதர கட்டணங்கள் கழிக்கப்பட்ட விபரங்களும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணத்தைப் பகிர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே போன்ற சம்பளத்தையே பெறுகின்றனர் என்றும், ஆனால் இது குறித்த விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வருமானம் தொடர்பான வெளிப்படைத்தன்மை முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன் பொதுமக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.



