News

அனுபவமில்லாத அனுரகுமார திஸாநாயக்கவை ஆட்சிக்கு கொண்டுவந்து அவர் ஆறு மாதங்களில் ஓடிய பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வர ரணில் சதித்திட்டம் தீட்டுகிறார் ; ரிஷாத்

செல்லாக்காசாகியுள்ள முன்னாள் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குமளவுக்கு, ரணிலின் அரசியல் வங்குரோத்தடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்றைய தினம் (09) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“நாளுக்கு நாள் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இடங்களில் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு மக்கள் எங்களைச் சந்திக்கின்றனர். சிறந்த ஆட்சியை சஜித் பிரேமதாசவால்தான் தர முடியுமென்ற நம்பிக்கை நாட்டின் நாலா திசைகளுக்கும் பரவி வருகிறது. வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளதால், ரணில் விக்ரமசிங்க வேறு வழிகளைக் கையாளத் தொடங்கி உள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்கவை ஆதரிக்கும் வகையிலான கருத்துக்களை ரணில் வெளியிடுவது, வேறு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அனுபவமில்லாத அனுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓடி விடுவாரென நினைக்கும் ரணில், மீண்டும் ஆட்சிக்கு வரத்தீட்டும் சதியே இது.

கோட்டாவின் கையாட்களும் கள்வர்களுமே ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். வீசா மோசடியில் 54 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்தனர். ரணிலால் இதைத் தடுக்க முடியவில்லை. புற்றுநோய் மருந்துக்குள் தண்ணீரைக் கலந்து மக்களைக் கொன்றதுடன், கோடிக்கணக்கில் கெஹெலிய ரம்புக்வெல்ல உழைத்தார். இந்த மோசடியையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுக்கவில்லை.

இவ்வாறான கள்வர்கள் தங்களைப் பாதுகாக்கவே ரணிலுக்கு வாக்கு கேட்கின்றனர். ரணிலிடம் மீண்டும் அதிகாரம் வந்தால், இந்தக் கள்வர்கள் பாதுகாக்கப்படுவர். இதற்கு நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது.

பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எம்முடனே உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் சேவைகள் விசாலமானவை. ஸ்மாட் வகுப்பறைகள், பாடசாலைகளுக்கான பஸ்களை வழங்கி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவித்தார். சுகாதார சேவைக்குள் அரசியல் தலையீடுகள் நுழைந்து, சேவையைச் சீரழித்தபோது, சொந்த நிதியில் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு உதவினார்.

பொய் பேசாத, வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்ற நேர்மையான அரசியல்வாதி சஜித். எனவே, நம்பிக்கையுடன் வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யுங்கள்” என்று கூறினார். 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button