மண் மாபியாவுக்கு எதிராக செயல்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் என். றிபாய்டீனுக்கு இட மாற்றம், சம்மாந்துறையில் சம்பவம் – மண் மாபியாவின் உத்தரவிற்கு பொலிஸ் நிர்வாகம் விலைபோனதா? ஊழலற்ற அரசே இது உங்கள் பார்வைக்கு

✍️ பாருக் ஷிஹான்
சித்திரை புத்தாண்டு தினத்தில் சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரத்தை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் என். றிபாய்டீன் அம்பாறை மாவட்டத்திற்கு உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இடமாற்றம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பகுதியில் உள்ள சட்டவிரோத மண் மாபியா மேற்கொள்ளும் நபரால் குறித்த உப பொலிஸ் பரிசோதகருக்கு நேரடியாக சொல்லப்பட்டு தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மிகவும் சுறுசுறுப்பாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சம்மாந்துறை பிராந்தியத்தில் உப பொலிஸ் பரிசோதகர் என். றிபாய்டீன் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் அம்மக்கள் அறிவார்கள்.
ஊழலற்ற அரசியல் சாயமற்ற இடமாற்றங்கள் இந்த அரசாங்கத்தில் வழங்கப்படும் என்ற சொல்லாடல்கள் உச்சரிக்கின்ற வேளை இவ்வாறு ஒரு மண் மாபியாவின் உத்தரவிற்கு பொலிஸ் நிர்வாகம் விலைபோனமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் இவ்விடயத்தில் நேரடி தலையீடு மேற்கொண்டு மீண்டும் இவ்வாறான மண் மாபியாக்களின் கட்டளைக்கு இணங்க இடமாற்றங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும்.சுயாதீனமாக இயங்குகின்ற இலங்கை பொலிஸ் தற்போது மண் மாபியாவின் கட்டளையின் பிரகாரம் நேர்மையான ஒரு அதிகாரியை இடமாற்றம் செய்திருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே இவ்வதிகாரி சம்மாந்துறை பகுதியில் பல்வேறு போதைப்பொருள் சந்தேக நபர்களை தனது தனிப்பட்ட திறமையின் காரணமாகவும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு சமூக விரோத செயலில் பசுத்தோல் போத்திய புலி போன்ற கயவர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியவர்.
அதே நேரம் 2 சட்டவிரோத மண் உழவு இயந்திரத்தை கைப்பற்றி சட்ட நடவடிக்கை எடுத்தமைக்காக நீதிமன்றத்திற்கு குறித்த வழங்கு சென்ற நிலையில் அதன் சூடு தணிவதற்குள் மண் மாபியா அவ்வதிகாரிக்கு மன்னர் சொன்ன சபதத்தை நிறைவேற்றி இடமாற்றம் செய்தமையானது பொலிஸ் துறையின் சுயாதீன தன்மைக்கு ஒரு இழுக்கு ஆகும்.
இந்த இடமாற்றத்தை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி தெரிந்து செய்தாரா இல்லை.மண் மாபியாவின் வலையில் தவறுதலாக விழுந்து செய்தாரா என்பதை காலம் பதில் சொல்லும்….



