News

சஜித் மற்றும் அனுரவின் கொள்கை மக்களை எப்போதும் ஏழைகளாக வைத்து அரசியல் இலக்குகளை நிறைவேற்றுவதே… நான் செழிப்பான கிராமங்களை உருவாக்கி அநுராதபுரத்தில் அரசர்கள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவை மீண்டும் ஏற்படுத்த வழி செய்வேன் ; ரணில்

மக்களின் வறுமையை ஒழிப்பதன்றி, அவர்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வளப்படுத்துவதே தமது கொள்கை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



மக்களை எப்போதும் ஏழைகளாக வைத்து அரசியல் இலக்குகளை நிறைவேற்றுவதே சஜித் மற்றும் அநுர ஆகியோரின் கொள்கை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த மாற்றத்திற்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டு மக்கள் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.



வவுனியா, மதவச்சியில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.



அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.



வறிய கிராமங்களுக்கு பதிலாக செழிப்பாக கிராமங்களை உருவாக்கி அநுராதபுரத்தில் அரசர்கள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவை மீண்டும் ஏற்படுத்த வழி செய்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.



அதற்காக விவசாயிகளைப் பலப்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவிருப்பதோடு, இம்முறை ஜனாதிபதி தேர்தல் கட்சியொன்றின் வெற்றியை தீர்மானிப்பதாக அன்றி நாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பதாக அமையும் என்பதால் கட்சி வேறுபாடுகளை விடுத்து நாட்டின் வெற்றியை உறுதி செய்ய ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.





இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,



அதிகளவான மக்கள் ஏன் தொப்பியை அணிந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு கிளிநொச்சியில் ஒரு பெண்மணி தந்தார். நாட்டை மீட்டெடுத்து மக்களுக்காக பணியாற்றி நாட்டு மக்களை தட்டுப்பாடுகள் இன்றி வாழ்வித்ததால் இந்த தொப்பியைத் தந்தார். எவரும் முன்வராத வேளையில் தட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன். இலட்சம் ரூபாவை விட இந்த தொப்பி எனக்குப் பெறுமதியானது.



கடந்த காலங்களில் என்னை விமர்சித்த அமைச்சர்கள் இன்று என்னோடு கைகோர்த்துள்ளனர். மக்கள் பசியிலிருப்பதை நாம் விரும்பாத காரணத்தினாலேயே ஒன்றுபட்டோம். சஜித்தும் அனுரவும் மக்கள் கஷ்டத்தை போக்க என்ன செய்தார்கள்? நான் செய்த சேவைக்கே எனக்கு கிளிநொச்சி பெண்மணி பாராட்டி தொப்பியை அணிவித்தார்.



வேறு எவரும் இந்த நாட்டை ஏற்க முன்வரவில்லை. மக்களை கஷ்டத்திலும் தட்டுப்பாட்டிலும் வாட விட்டு சஜித் வேடிக்கை பார்த்தார். அனுர செய்தவை ஒன்றும் இல்லை. மக்களை அநாதரவாக விட்டுச் சென்றனர். இங்கு மக்கள் பொருட்களின் விலையை குறைக்குமாறு கோரினார்கள். அடுத்த வருடத்தில் அதனை செய்வோம்.



நாம் தொடர்ந்தும் வறிய நாடாக இருக்க முடியாது. நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். நாட்டின் இறக்குமதிக்கு செலுத்த போதுமான நிதி இல்லை. எனவே ஐஎம்எப் அமைப்பும் உலக வங்கியும் கடன் வழங்கும் 18 நாடுகளும் எமக்கு உதவ முனவந்துள்ளன. ஆனால் கட்டாயமாக நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.



அதனை செயற்படுத்தவே இயலும் ஸ்ரீலங்கா திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம். நாம் வரி அதிகரிப்பு என்ற கஷ்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. அனைவருக்கும் அதன் சுமை தெரிந்தது. ஆனால் 6 மாதங்களில் ரூபாவின் பெறுமதி அதிகரித்து பொருட்களின் விலை குறையவும் வழி ஏற்பட்டது.



அதனால் தற்போது மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கிறது. அது போதுமானதல்ல. அடுத்த வருடத்தில் மேலும் பல சலுகைகளை மக்களுக்கு வழங்குவோம். குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண திட்டங்களும் தொடர்ச்சியாக வழங்கப்படும். அரச ஊழியர்கள் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



உறுமய திட்டத்தில் பெருமளவானர்களுக்கு காணு உறுதிகள் வழங்கப்படும். மக்களை கஷ்டத்திலிருந்து மீட்க விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தை செயற்படுத்துவோம்.



சஜித்தும் அனுரவும் நாட்டின் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பார்கள் என்று மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அனுராதபுரத்தை தம்புள்ளை போன்ற கலாச்சார மையமாக மாற்றுவோம். புதிய பொருளாதாரத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் வாக்கு கேட்கிறோம்.



நான் ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட தலைவர்களிடமே அரசியல் கற்றேன். பிரேமதாச ஜனாதிபதி ஒருபோதும் சவால்களைக் கண்டு பாய்ந்தோட கற்பிக்கவில்லை. அவரின் கொள்கைகயை முன்னோக்கி கொண்டுச் செல்லவே வாக்கு கேட்கிறேன். மக்கள் கஷ்டத்தில் இருந்த வேளையில் நான் பயந்து ஓடவில்லை. எனவே ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மோடு கைகோர்த்து உதவுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.



அரசியல் குரோதங்களை கைவிடுங்கள். மக்கள் பசியை போக்க அனைவரும் ஒன்றுபட வேண்டியதே காலத்தின் தேவையாகும். எனவே எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். அதனை செய்யாவிட்டால சிலிண்டரும் இருக்காது விவசாயமும் இருக்காது” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker