இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு – இதற்காக தாம் முழுமையாகத் தயாராக இருப்பதாக மேலும் தெரிவிப்பு

இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பொதுமக்களிடையே புத்தாண்டு தொடர்பான உற்சாகமோ அல்லது உண்மையான புத்தாண்டு உணர்வோ காணப்படவில்லை.
மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இம்முறை புத்தாண்டை கொண்டாடினர்.
இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித நாளான வைகாசி பௌர்ணமி தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை.
மே தினத்திற்குப் பதிலாக அன்றைய தினம் சமய வழிபாடுகள் மற்றும் ‘பிங்கம் எனப்படும் பௌத்த புண்ணிய காரியங்கள்’உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.
புதிய ஆண்டில் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தை தமது கட்சி வைத்துள்ளது.
வரவிருக்கும் அரசியல் சவால்கள் மற்றும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக தமது கட்சி முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்


