இந்த நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்கவை நாம் பாதுகாக்க வேண்டும் – அவர் சத்திரசிகிச்சை செய்துவிட்டதால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவரின் 97 வயது வரை இலங்கை பாதுகாப்பாக இருக்கும் ; வஜிர

மறைந்த லலித் அதுலத்முதலி அவர்களின் 33வது நினைவு தின விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆற்றிய உரை
முன்னாள் துறைமுக அமைச்சரான மறைந்த லலித் அதுலத்முதலி அவர்களின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டே இன்று நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். இலங்கை துறைமுக அதிகார சபையை நிறுவி, நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளித்து, கொழும்பு துறைமுகத்தை மிகவும் வளர்ந்த, திறமையான துறைமுகமாக மேம்படுத்தி, நாட்டிற்கும் துறைமுக ஊழியர்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான சேவைக்காக நாம் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், 33 ஆண்டுகளுக்கு முன்பு அவர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தார். கொலையாளியைத் தேடியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை; அவை நேரத்தை வீணடிக்கும் வேலைகள் மாத்திரமே. அதுலத்முதலி அவர்கள் மாபெரும் சேவையாற்றிய ஒருவர். அவர் எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்று ‘ராஜாலியா’ (DUNF) கட்சியை உருவாக்கினார். காலி நகரில் நடைபெற்ற ராஜாலியா கூட்டங்களின் போது அவர் எனது வீட்டிற்கு வந்ததை நான் நினைவுகூர்கிறேன். அந்தச் சந்தர்ப்பங்களில் “வஜிர எனக்கு உதவி செய்” என்று அவர் என்னிடம் கேட்டார், ஆனால் நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.
எமது கட்சியுடன் இணையுமாறு நான் அவரிடம் கூறினேன். எப்படியிருப்பினும், இறுதியில் அவரது இறுதிப் பயணம் மிகவும் சோகமான முறையில் அமைந்தது. எனவே அவரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அதனை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். எப்படியிருந்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதுதான் இந்த நேரத்தில் இலங்கைக்கு மிக முக்கியமான விடயமாகும். பிரிந்து நின்று சண்டையிட்டு மடிந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்லவே முடியாது.
அந்தக் காலத்தில் துறைமுகத்தில் பணியாற்றிய மகிந்தபால என்பவரை எனக்குத் தெரியும். அவர்தான் லலித் அதுலத்முதலி அவர்களுடன் இணைந்து நாடெங்கிலும் சென்று நிதியைத் திரட்டி இந்த ‘மகாபொல’ கல்வி உதவித்தொகை நிதியத்தை உருவாக்கினார். அந்த மகிந்தபாலவும் இந்தத் துறைமுகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதற்கு நமது நாட்டிற்குள் நீண்டதொரு வரலாறு உண்டு. இங்கு இருப்பவர்களும் தங்களது வியர்வையையும் உழைப்பையும் அர்ப்பணித்து இவற்றை உருவாக்குவதற்காகத் தங்களை அர்ப்பணித்த ஒரு குழுவினராவர். இவர்கள்தான் தேசத்தின் இதயமாகத் திகழும் இந்தத் துறைமுகத்திற்குப் பலமாக இருக்கிறார்கள். இவர்களுக்குப் பலமாக இருப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ரணில் விக்ரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களுடன் இளைஞனாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, மகாபொல திட்டம் கல்வி அமைச்சருக்கே சொந்தமானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்கள் ரணில் விக்ரமசிங்க அவர்களை அழைத்து, பல்கலைக்கழக மாணவர்களுக்காக லலித் மகாபொல திட்டத்தைத் தொடங்கவுள்ளதாகக் கூறி அது குறித்து ரணிலின் கருத்தைக் கேட்டார். அந்த நேரத்தில் ரணில் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், மகாபொல திட்டத்தைத் தொடங்கியிருக்க முடியாது. ஆனால், லலித் அதைச் செய்கிறார் என்றால் தனது அமைச்சின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் கூறினார். அவ்வாறுதான் மகாபொல உருவாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இவ்வளவு செய்த ஒருவரை எமது தேசம் நடத்திய விதம் குறித்து ஒரு தேசமாக நாம் வருத்தப்பட வேண்டும். அவர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறிய உடனேயே அவருக்கு ‘திருடன்’ என்ற முத்திரை குத்தப்பட்டது. அதுதான் எமது பிரிவினையின் தன்மை. கப்பல்களை விழுங்கியதாக எமது ஆட்கள் சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். இந்தத் திருடன் என்ற கருத்து சிங்கள பௌத்தர்களிடையே மட்டுமே உள்ளது. இரு பக்கமாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்கிறார்கள். எனவே சிங்கள பௌத்தர்களாகிய நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
அரசியல் களத்திலுள்ள பிரதான கோஷங்களில் ஒன்றுதான் ‘திருடன்’ என்பது. இப்போது திருடன் யார் என்பது தெரியவந்துள்ளதே.
வரலாற்றில் முதல் முறையாகத் திறைசேரியில் ஒரு கொள்ளை நடந்துள்ளது. இது எளிதானது அல்ல. அதனை அனுமதிப்பதற்காக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும், ஏனெனில் இரண்டு முறை பணம் செலுத்த முடியாது, இரண்டாவது முறை 2.5 பில்லியன் டொலர்களைச் செலுத்துவதற்கு மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டி அனுமதி பெற வேண்டும். இன்று பேசப்படும் திருட்டைப் பற்றித்தான் நான் இப்போது கூறினேன்.
இதனால்தான் ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாம் ஒரு தேசமாக முன்னேற வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று சிந்தித்துக் கூறினார். இல்லையெனில் இரு பக்கமாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்வோமே தவிர முன்னேற்றம் இருக்காது. இங்கும் பல தொழிற்சங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள், அது மிகவும் நல்லது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் துறைமுகத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் துறைமுகத்திற்கு என்னவாகும் என்று தெரியாது.
நான் இங்கு இருக்கும்போது அமைச்சர் சாகல அவர்களுடன் கப்பல் கட்டும் தளம் குறித்துப் பேசினேன். ஏனெனில் சர்வதேச அரசியலுடன் நாம் அவதானமாகச் செயற்பட வேண்டும். அது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டிய இடம்தான் கொழும்பு துறைமுகம். யாராவது முதலீட்டாளர் வரும்போது சர்வதேச அரசியலை அவதானமாகப் பார்க்க வேண்டும்.
நாம் அவதானமாகச் செயற்படாவிட்டால் ஒரு தேசமாக ஆபத்தை எதிர்நோக்குவோம். யாரையும் திட்டாதீர்கள், திட்டுவதால் பயன் இல்லை. இந்த அரசாங்கத்திலுள்ள பிள்ளைகளையும் திட்டாதீர்கள். அவர்களுக்குத் தெரிந்ததைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் 65, 70 ஆண்டுகளாகத் தங்களுக்குத் தெரிந்ததைச் செய்தார்கள். அதுதான் சுவர்கள், பசை மற்றும் சுவரொட்டிகள்; அவர்களுக்குத் தெரிந்ததைத்தானே அவர்கள் செய்வார்கள்.
இப்போது அந்தப் பிள்ளைகள் ஒரு அழகான வீட்டைக் கட்டிக் கொள்ளும்போது அவர்களைத் திட்டாதீர்கள். 30, 40 ஆண்டுகளாகக் காட்டில் இருந்தவர்கள் ஒரு வீட்டைக் கட்டுவது எவ்வளவு நல்லது? அது ஒரு தவறு அல்ல. அவற்றைத் திட்டி, சண்டையிட்டு, அவதூறு பேசாதீர்கள். அப்படிச் செய்தால் எம்மால் இந்தப் பயணத்தைத் தொடர முடியாது. எமக்கு அனைவரும் தேவை. அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே நாட்டை மீட்டெடுக்க முடியும். இல்லையெனில் ஒரு தேசமாக நாம் பெரியதொரு நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
அதனால்தான் நான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேறொரு இடத்தில் பேசும்போது, நாம் அவதானமாகச் செயற்படாவிட்டால் இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறும் என்று கூறினேன். அந்தளவிற்கு நாம் பிரிந்து கிடக்கிறோம். அதனால்தான் நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க அவர்களைப் பாதுகாக்க நாம் முயற்சிக்கிறோம்.
அவரைப் பற்றிப் பயப்பட வேண்டாம், அவர் இப்போது மிகச் சிறந்த ஆரோக்கிய நிலையில் இருக்கிறார். அந்த சத்திரசிகிச்சையை 65 வயதில் செய்திருந்தால் 75 வயதில் ஓய்வு பெற்றிருப்பார். இப்போது 77 வயதில் அந்தத் திருத்தத்தைச் செய்துள்ளார். இப்போது 87 அல்ல, 97 வயது வரை 20 ஆண்டுகளுக்கு இலங்கை பாதுகாப்பாக இருக்கும் என்று என்னால் பயமின்றிச் சொல்ல முடியும். இவற்றைச் சொல்லும்போது சிலர் என்னைத் திட்டக்கூடும், திட்டுவதால் எனக்குப் பயன் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள். நாடு பாதுகாப்பாக இருந்தால் யார் திட்டினாலும் எனக்குக் கவலையில்லை.
பாருங்கள் எமது தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். இன்றைய நாளைப் போன்ற ஒரு நாளில் அதனை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. ரணில் விக்ரமசிங்க அவர்கள் 2022 ஜூலை 20 அன்று 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான பின்னர் நான் நாடாளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றினேன். எனது உரை ஹன்சாட்டில் (Hansard) உள்ளது. எமது முன்னாள் தேசியத் தலைவர்கள் சுமார் 120 பேர் அகாலமாகக் கொல்லப்பட்ட விதத்தை நான் அங்கு கூறினேன்.
எனவே நாம் மீண்டும் பிரிந்து எமது அரசியலைச் செய்தால், கடலுக்கு அப்பால் இருப்பவர்கள் எம்மை அடிமைப்படுத்துவார்கள். அப்படி நடந்தால் ஒரு தேசமாக நாம் அழிந்து போவோம். அவற்றைக்கட்டுப்படுத்தத் தேவையான சட்ட திட்டங்களை ரணில் விக்ரமசிங்க அவர்கள் கொண்டு வந்துள்ளார். அதனால்தான் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தார், இதன் மூலம் வெவ்வேறு நபர்கள் தங்களுக்குத் தேவையான முறையில் பணத்தைச் செலவழித்து இந்த நாட்டில் அரசியல்வாதிகளை உருவாக்க முடியாது.
இலங்கையர்களாகிய நாம் ஒன்றாகச் சிந்தித்துச் செயற்படாவிட்டால் எமது தேசம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். அதனை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், எமக்கு ஒரு அதிர்ஷ்டம் எஞ்சியுள்ளது, அதுதான் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமானது என்று சிலர் நினைத்தார்கள். அவ்வாறு அது பலவீனமடையவில்லை. ஒரேயொரு ஆசனம் இருந்தபோது அதிலிருந்து நாம் பிரதமராகி, ஜனாதிபதியானோம். ஒன்றும் இல்லாதபோதும் எம்மால் ஒரு ஜனாதிபதியை உருவாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுதான் ஐக்கிய தேசியக் கட்சி. அதனை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றுமில்லாத போதும் அப்படித்தான், ஒன்று இருக்கும்போதும் அப்படித்தான். எனவே நாம் அனைவரும் அவதானமாகச் செயற்பட வேண்டும், தேசத்தைப் பற்றிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு நடந்தால் இது போன்ற அகால மரணங்களுக்குச் சிலைகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று பிரார்த்தித்து உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க உட்பட தேசிய சேவக சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமானோர் கொழும்பு துறைமுக ஜயபஹலு நுழைவாயிலுக்கு முன்னாலுள்ள லலித் அதுலத்முதலி சிலையின் அருகில் தேசிய சேவக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்,
முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன
ஊடகப் பிரிவு



