News

ஜே.வி.பி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் தனியார் சட்டங்களுக்கு ஆபத்து !!

ஜே.வி.பி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் தனியார் சட்டங்களுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் லாபிர் ஹாஜியார் குறிப்பிட்டார்.

அக்குரனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

முஸ்லிம் தனியார் சட்டம் உட்பட பல முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளை இலங்கையில் அரங்கேற்றிட பல அமைப்புக்கள் மிக நீண்ட காலமாக முயற்சித்து வருவது நாமறிந்ததே.இந் நிலையில் தே.ம.சக்தியின் ஆட்சி வந்தால், என்ன நடக்கும் என்பது பற்றி சிந்திப்பதும் பொருத்தமானது.

தே.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயாக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது முஸ்லிம்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என தெளிவாக பேசியதோடு முஸ்லிம்கள் சிறுவர் திருமணத்தை ஆதரிப்பது போலவும் பெண்களை அடிமைகளாக நடத்துவது போலவும் பேசியிருந்தார்.

ஆசியாவிலேயே இலங்கை முஸ்லிம் பெண்களே அதிகமாக ஒடுக்கப்படுவதாகவும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதார திருமணம் பற்றியும் மிக மோசமாக விமர்சித்திருந்தார்.

இதனை அவர்கள் எதிர்வரும் காலங்களிலும் பேசுவார்கள் என்பதில் ஐயமில்லை.அவர்கள் ஒரு விடயத்தை பேச ஆரம்பித்துவிட்டால், அதனை அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார்கள்.அதுவே ஜே வி பியின் கொள்கை.

முஸ்லிம்கள் தே.ம.சக்தியை ஆதரிக்க முன் இக் கொள்கைகள் தொடர்பில் தே.ம.சக்தியின் நிலைப்பாட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் எமது மார்க்கத்தில் கை வைக்க இடம் கொடுக்க முடியாது. வெற்று கோசங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காது, சிறந்த முறையில் சிந்தித்து எமது முடிவுகளை எடுத்தல் அவசியமானது.

தே.ம.சக்தியினர் ஒரு விடயத்தை கையில் எடுத்துவிட்டால், அதனை நிறைவேற்றுவதில் குறியாக இருப்பர். இவ் விடயத்தில் அவர்களது நிலைப்பாடு மாறாது என்றே தோன்றுகிறது. தே.ம.சக்தியை ஆதரித்து, எம் தலையில் நாமே மண்ணை அள்ளி போடுவதா என சிந்தித்துகொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button