இலங்கை பணியாளர் மற்றும் 18,500 பீப்பாய் எண்ணெயையுடன் சென்று கொண்டிருந்த கப்பல் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சம்பவ விபரம்

சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, சோமாலியக் கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் டாங்கியில் இருந்த 17 பணியாளர்களில் ஒரு இலங்கை பிரஜையும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ‘Honour 25’ என அடையாளம் காணப்பட்ட இந்தக் கப்பல், கடந்த புதன்கிழமை பிற்பகுதியில் ஆயுதமேந்திய நபர்களால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் இருந்த பணியாளர்களில் 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஓர் இந்தியர், ஓர் இலங்கையர் மற்றும் மியான்மார் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடங்குவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த டாங்கிக் கப்பல் 18,500 பீப்பாய் எண்ணெயை ஏற்றிக்கொண்டு மொகடிஷு (சோமலிய கடற்கரை நகரம்) நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்தக் கப்பல் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில், சோமாலியக் கடற்கரையோரத்திலுள்ள ஹாஃபுன் (Xaafun) மற்றும் பண்டர் பெய்லா (Bander Beyla) ஆகிய மீன்பிடி நகரங்களுக்கு இடையே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் சோமாலியக் கடற்பரப்பில் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்திருந்த நிலையில், இந்தக் கடத்தல் சம்பவம் மீண்டும் அங்கு கடற்கொள்ளைச் நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான மற்றொரு அடையாளமாகக் கருதப்படுகிறது.



