VIDEO > நான் ஏன் துப்பாக்கியை ஏந்தியபடி சண்டையில் ஈடுபட்டேன்? அர்ச்சுனா MP விளக்கம்

யாழ்ப்பாணம், பெரியவிளானில் சர்ச்சைக்குரிய காணி தொடர்பாக ஏற்பட்ட மோதலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இந்தச் சம்பவம் குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கோடு தொடர்புடையதுடன், பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு பெண் உள்ளடங்கிய மற்றொரு தரப்பினரும் குறித்த காணிக்கு உரிமை கோரி வருகின்றனர்.
கடந்த 25ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் தனது பூர்வீகக் காணி என விவரித்த இடத்தில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவினர் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.
அக்குழுவினர் துப்பரவுப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், காணியின் சில பகுதிகளுக்கு உரிமை கோரியதை அடுத்து அங்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது, தரப்பினரிடையே பதற்றம் அதிகரித்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியை ஏந்தியிருப்பது வீடியோவில் காணப்பட்டது.
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, முகநூல் நேரலையில் தோன்றிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அக்குழுவினர் காணிக்குள் நுழைந்து தனது பணியைத் தடுத்ததாகவும், இதன்போது தன் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தற்காப்புக்காகவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தனது தனிப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார். எவருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணம் தமக்கு இருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். Video > https://youtu.be/p9VFBUw2cJI?si=HfOmgcc7riXbY3v8



