திறைசேரியில் இருந்து தவணைக் கடன்களைச் செலுத்துவதற்கு 13 படிகளைக் கொண்ட ஒரு செயல்முறை உள்ளது – இந்த படிகளில் உள்ள ஏதோ குறைபாட்டால் தான் நம் நாடு இன்று 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது ; அரசுக்கு சஜித் அறிவுரை

2022 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஒரு போராட்டம் ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள்.
அந்தப் போராட்டத்தின் விளைவாகவே நாடாளுமன்றச் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காகவே துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு 500 முதல் 600 இளைஞர்கள் நேர்முகத் தேர்வு மூலம் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
ஆனால் இன்று அந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அதிலிருந்த இளைஞர் பிரதிநிதித்துவம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் செயலானது,
கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டுக்கு இழக்கப்பட்ட (செலுத்த வேண்டிய கடன் தவணை) 25 இலட்சம் டாலர் விவகாரத்துடன் தொடர்புடையது என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.
பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றும், இதைத் தீர்க்க முடியும் என்றும் காட்ட முயல்கிறார்கள்.
ஆம், நாட்டின் மக்கள் மீது அதிக வரிச் சுமையைச் சுமத்துவதன் மூலம் இதைத் தீர்க்க முடியும். இழந்த தவணையை வரி செலுத்தும் மக்களின் தலையில் சுமத்தி ஈடுகட்ட அரசாங்கம் நினைக்கிறது.
ஒரு நாடு என்ற ரீதியில் பலதரப்பு, இருதரப்பு மற்றும் இறையாண்மைப் பத்திரக் கடன் வழங்குநர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை உள்ளது. ஒரு முறையான கட்டமைப்பு உள்ள நாட்டில் இவை எந்தக் குறைபாடும் இன்றி நடக்க வேண்டும். திறைசேரியில் தவணைக் கடன்களைச் செலுத்துவதற்கு 13 படிகளைக் கொண்ட ஒரு செயல்முறை இருப்பதாகக் கூறப்படுகிறது.
சஜித் பிரேமதாச இதை விளக்கும் வரை காத்திருக்காமல், இந்த 13 படிகளில் என்ன குறைபாடுகள் உள்ளன என்பதை நீங்களே தேடிப் பாருங்கள்.
ஏதோ ஒரு குறைபாட்டினால்தான் நமக்கு 25 இலட்சம் அமெரிக்க டாலர்கள் இழக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ‘மின்னஞ்சல் மோசடி’ (Business Email Compromise) காரணமாக நடந்ததாகக் கூறலாம். இவ்வாறான ஒரு சம்பவத்தை முன்கூட்டியே கணித்துத் தடுத்திருக்க முடியும். ஆனால் அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் கவனக்குறைவால் அது நடக்கவில்லை. இதில் ஏதோ ஒரு மோசடி நடந்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
முதலில் நடக்க வேண்டியது என்னவென்றால், திறைசேரிச் செயலாளர் பதவியில் இருந்து விலகி, இது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற விசாரணையும் அவசியம். நிதிக்குழுவுக்குத் திறைசேரிச் செயலாளர் முதல் மத்திய வங்கி ஆளுநர் வரை அனைவரையும் அழைத்து இது குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும்.
கடன் செலுத்தும் முறை மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடன் மேலாண்மை நிறுவனம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாம்.
அப்படி நடந்திருந்தால், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
கடன் தவணை செலுத்தப்படாததால், இப்போது ‘இறையாண்மை கடன் தவறுதல்’ என்ற பிரச்சினை எழுகிறது. நாடு அத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நிதி அமைச்சரும் செயலாளரும் நாட்டுக்கு விளக்க வேண்டும். இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது இன்னும் சில நாட்களில் மற்றொரு தவணையும் இழக்கப்பட்டுவிட்டது, அதுவும் திருடப்பட்டுவிட்டது என்று சொல்லப்போகிறீர்களா?
இந்த அரசாங்கத்திற்கு இது குறித்து ஏதேனும் புரிதல் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. கடந்த சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி தலைமையில் இணைய பாதுகாப்பு குறித்த ஒரு பிரம்மாண்ட திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த இணைய பாதுகாப்பு கட்டமைப்பு இருக்கும்போது, எப்படி மக்களின் 25 இலட்சம் டாலர்கள் திருடப்பட்டது என்பதற்கு முறையான பதில் தேவை.
இந்தச் செயல்பாட்டிற்குப் பொறுப்பான திறைசேரிச் செயலாளரை அதே பதவியில் வைத்துக்கொண்டு, ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உண்மையை அறிய முடியும் என்று நான் நினைக்கவில்லை.


